Friday, July 31, 2020

கீர்த்திமிகு கிருபாச்சாரியார்


கௌதம முனிவரின் பேரன் சரத்வான். சரத்வான் பிறக்கும்போதே வில் அம்புகளுடன் பிறந்தவன். இளமைக்காலத்தில் வேதங்களைப் படிப்பதில் நாட்டமின்றி அனைத்து ஆயுதங்களையும் கற்றுத் தேர்ந்தான். அவனை விற்போட்டியில் யாராலும் வெல்லமுடியாதிருந்தது. இதனால் அச்சமடைந்த தேவர் மன்னன் இந்திரன் அவனது ஆற்றலை கட்டுப்படுத்த தேவலோக அழகி ஜனபதியை திருமணத்தை மறுக்கும் சரத்வானிடம் அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காமத்தை எதிர்கொள்கிறான். இருப்பினும் அவனிடமிருந்து விந்து கீழே விழுகிறது. செடிகளில் விழுந்த விந்து, இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். இதனை அறியாத சரத்வான் அங்கிருந்து தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான். 

ஒருமுறை சந்தனு மகாராஜா வனத்திற்கு வந்தபோது விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் அழைத்து வந்து தம் அரண்மனையில் வளர்த்துவந்தார். அவர் கிருபையுடன் (கருணையுடன்) அழைத்து வந்ததால் அக்குழந்தைகளுக்குக் கிருபர், கிருபி என்று பெயரிட்டு வளர்த்தனர்.

பின்னால் இதனை அறியவரும் சரத்வான் அரண்மனைக்கு வந்து தனது அடையாளத்தை நிலைநிறுத்தி குழந்தைகளுக்கு வில்வித்தை, வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் பிற உலக இரகசியங்களை கற்றுக் கொடுக்கிறான். கிருபர், தம் தந்தை சரத்வான் போலவே அஸ்திர வித்தைகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். தாம் கற்றறிந்தவற்றைப் பிறருக்கும் கற்றுத்தரும் ஆற்றலும் அவரிடம் இருந்ததை அறிந்த பீஷ்மர் அவரைப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசிரியராக நியமித்தார்.

மகாபாரத்தில் அஸ்தினாபுரம் அரசவையில் ராஜகுருவாக இருந்தவர்.

இவரிடம் 105 பேரும் வில்வித்தையை சரளமாகக் கற்றனர். இன்னும் மற்போர், போரில் வியூகம் அமைக்கும் முறை என பல கலைகளையும் கற்றுத்தந்தார் கிருபர். கிருபாச்சாரியாருக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் கிருபி. இவரைத் துரோணர் என்னும் பெரும் வில்வித்தையாளருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

அஸ்வத்தாமன் க்ரிபரின் மருமகன். இதில் என்னவொரு விந்தை என்றால் மாமன் மருமகன் இருவருமே சிரஞ்சீவிகள். போர் முடிவில் கௌரவர்கள் தரப்பில் கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே உயிருடன் எஞ்சினர். பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்யகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர்.

கிருபர் அஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத் தக்கவராக வாழ்ந்தார். குரு வம்சத்தின் கடைசி வாரிசான அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்துக்கு  எல்லா கலைகளையும் கற்றுக்கொடுத்தது இவர்தான்.

கிருபர், துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்தவர், மகாபரதப் போரில் கௌரவப் படையின் பதினோறு படைத்தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

துரியோதனின் வீழ்ச்சியால் மனம் கொதித்த அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

கிருபர் அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். “துரியோதனன் பெரியோர்களை மதிக்கத் தெரியாதவனாக, பலரால் தூண்டப்பட்டுத் தவறான பாவச்செயல்களைச் செய்தான். ஆகையால் அவன் இந்த நிலையை அடைந்தன். நாமும் அவனைப் போல, நடந்தால் நமக்கு அவனுடைய நிலையே கிடைக்கும், நாம் திருதராஷ்ட்ர மன்னனைக் கலந்து ஆலோசித்துவிட்டு, அவர்கள் சொல்படி நடப்போம்” என்றார். கிருதவர்மா என்ற யாதவ மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால், கிருபரின் யோசனையை அவன் ஏற்கவில்லை.

8 ஆவது மன்வந்தரத்தில் சப்த ரிஷிகளில் ஒருவர் அது மட்டுமில்லாமல் இந்த கலியுகத்தில் ரிஷிகளில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.
இவர் ஒரு மகாரதி. 12 அதிரதிகளுக்கு சமானமானவர். 7,20,000 வீரர்கள் கொண்ட படைகளுடன் மோதும் வலிமை பெற்றவர்.

உண்மை, நியாயம், சட்டம், ஒழுக்கம், நெறிமுறைகள் இவற்றிற்கு எடுத்துக்காட்டாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் கௌரவர்கள் சபையில் விளங்கினார். அதனால் இன்றும் சிரஞ்சீவியாக போற்றப்படுகிறார்.

காலை ஸ்நானம் செய்யும்போது இந்த ஏழு பேரை சொல்லி
உச்சரியுங்கள்-)
அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:
அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.

எவர் ஒருவர் கோழைத்தனம் இல்லாமலும், தைரியத்துடன் நேர்வழியிலும் போரிடுகிறார்களோ, அவர்கள் கிருபரின் அம்சமாக பார்க்கப்படுவார்கள். இவருக்கான காயத்ரி மந்திரம்...
“ஓம் தனுர்வித்யாய வித்மஹே
ராஜ தர்மாய தீமஹி
தந்நோ க்ருப்பாச்சார்ய ப்ரசோதயாத்”