Sunday, August 23, 2020

ஸ்ரீ ராதாஷ்டமி - 26-08-2020 (ஸ்ரீமதி ராதாராணி அவதார திருநாள்)

ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம்
ராதா ரமணகிருஷ்ண ஸ்தோத்ரம்

🌸கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு அடுத்த அஷ்டமி ராதாஷ்டமி. ஸ்ரீமதி ராதாராணி திருஅவதாரம் புரிந்த நன்னாள். இந்த வருடம் 26-08-2020 (புதன் கிழமை) ஸ்ரீ ராதாஷ்டமி.

🌸மஹாலக்ஷ்மியின் மூல அவதாரமாக கருதப்படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் அந்தராத்மாவாகவும், அந்தரங்க சக்தியாகவும், உள்ளுணர்வாகவும், நித்ய துணைவியாகவும் வீற்றிருந்து ஆட்சி புரிவதனால் "ஸ்ரீ மதி ராதா ராணி" என்று அழைக்கப்படுகிறார். 

🌸ஸ்ரீ கிருஷ்ணரின் அஷ்ட மஹிஷிகளுக்கு கிடைக்காத சிறப்பு ராதாவின் பிரேம பக்திக்கு கிடைத்தது. அதனால் தான் ராதா கிருஷ்ணன் என்றும் ராதே கிருஷ்ணா என்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமாவுடன் சேர்த்து துதிக்கப்படுகிறாள்.

🌸பரிபூரண தூய பக்தி, பிரேமம் (தெய்வீக காதல் உணர்வு) இவற்றில் ஸ்ரீ கிருஷ்ணரின் முதன்மை பக்தை என்ற சிறப்பு பெற்ற ஒரே சக்தி ஸ்ரீ மதி ராதா ராணியாகும். மற்ற யாருக்கும் கிடைக்காத ஒரே பாக்கியம் ஸ்ரீ மதி ராதா ராணிக்கு கிடைத்தது. இது ஸ்ரீ கிருஷ்ணரே மனமுவந்து அளித்த பொக்கிஷம். அதனால்தான் பாகவதோத்தமர்களில் ஸ்ரீ கிருஷ்ண பக்திக்கு முன்னோடியாக ஸ்ரீமதி ராதாரணி அசைக்க முடிய சக்தியாக விளங்குகிறாள்.

🌸கிருஷ்ணரின் சேவையில்  ராதாராணியே முதலிடம்.  கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதி ராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது.

🌸ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில் அவதாரம் புரிந்த சிறு நாழிகை கழித்து ஸ்ரீமதி ராதாரணி வ்ருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில், பொன் தாமரை மலரில் அவதரித்தார். இவரின் தாயார் கீர்த்திதா. குழந்தையின் தேகம் பொன்னிறமாக ஜொலித்தது. பூர்வ ஜென்ம புண்ணிய குவியல் மற்றும் பகவத் சங்கல்பத்தினால் மன்னர் வ்ருஷபானு மஹாலக்ஷ்மியின் மூலமான ஸ்ரீ ராதா ராணியின் தகப்பனார் ஆகும் பாக்கியம் கிடைத்தது.

இத் தெய்வீக குழந்தை பிறந்ததும் கண் திறக்கவும் இல்லை வாய் பேசவும் இல்லை. பெற்றோர்கள், மற்ற குழந்தைகளை போல் இல்லாமல் இயற்கைக்கு வினோதமான முறையில் இருப்பதை கண்டு மிக்க மனம் வருந்தினர். இவர்களின் கவலையை போக்கும் விதமாக ஸ்ரீ நாரத மகரிஷி, அவர்கள் இல்லம் வந்து உடனே இக்குழந்தை பிறந்ததிற்கான விழா நடத்துங்கள் அனைத்தும் சுபமாக முடியும் தங்களின் மனக்கவலையும் போய்விடும் என்றும் கூறினார்.

நாரதரின் ஆணைப்படி, மன்னர் வ்ருஷபானு மிக கோலாகலமாக விழாவிற்கு ஏற்பாடு செய்தார். இப்புனித விழாவிற்கு அனைத்து உறவினர்கள், பந்து மித்ரர்கள் மற்றும் இவரின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீ நந்தகோபரும் அழைக்கப்பட்டார். ஸ்ரீ நந்தகோபர், யசோதா, ரோகினி பலராமர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அனைத்து வ்ருஷ்ணி இனத்தவர்களும் விழாவிற்கு சென்றனர்.

🌸சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து, ராதாராணியின் தொட்டில்  அருகே சென்றார். தன் பிஞ்சு விரல்களில் இருந்த புல்லாங்குழல் நழுவி ஸ்ரீமதி ராதாராணி மேல் விழ, ராதா ராணி தனது  முதல் பார்வையை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மீது செலுத்தினாள். என்ன ஒரு மனோகரமான நிகழ்வு. கற்பனைக்கும் எட்டாத பிரேம நிகழ்வு. வசீகரமான அந்த கிருஷ்ணரின் பார்வையின் காந்தத்தினால் உந்தப்பட்டு அவள் மனதில் ஸ்ரீ கிருஷ்ணரைத் தவிர வேறு யாரும் இல்லாத பிரேம பக்தியுடன் திகழ்ந்தாள். உலகத்திலேயே கிருஷ்ண பரமாத்மாவின் பக்தர்களில் முதன்மையானவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றார். வேறு யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம். ஸ்ரீ கிருஷ்ணரின் மனமெனும் அரண்மனையில் நித்ய ராணியாக ஸ்ரீ மதி ராதா ராணி கொலுவீற்று இருக்கிறாள்.

🌸ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும். யார் ஒருவர் கிருஷ்ணருக்கும், கிருஷ்ண  பக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர் ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸வருடத்தின் ஒரு நாள் அதாவது ஸ்ரீ ராதாஷ்டமி அன்று மட்டும்தான் ஸ்ரீ மதி ராதா ராணியின் திருப்பாதம் தர்சனம் பண்ண முடியும். ஆண்டு முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத தரிசனத்தை விட வருடத்தின் ஒரே ஒரு நாள் ஸ்ரீமதி ராணியின் பாத தர்சனம் மிக புண்ணியம். ஏனென்றால் தன்னைவிட தன்னுடைய பக்தர்களின் தரிசனத்தையே ஸ்ரீ மன் நாராயணன் மிகவும் விரும்புகிறார்.

ஸ்ரீராதாஷ்டமி அன்று செய்ய வேண்டியது:.
அன்று மதியம் வரை விரதம் இருக்க வேண்டும்.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகபட்சம் உச்சரிக்க வேண்டும். ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் செய்ய வேண்டும்.
 
மகா காருண்ய சிந்து. பக்தர்களுக்கும் பகவானுக்கும் ஓர் பாலமாக இருந்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பவள். 

🌸பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ஸ்ரீமதி ராதா ராணியின் பிரேம பக்தி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

🌸கோடி மன்மத அழகும், தேஜஸும் உடையவள். அனைவரையும் வசீகரிக்கும் அதி ரூப லாவண்யம் ஸ்ரீ மதி ராதாரணியினுடையது. அனைத்தும் பிரம்மமாக கண்ட சுக ப்ரஹ்மத்தையே சற்று அசைத்து பார்த்த பக்தி என்றால் அது ஸ்ரீமதி ராதா ராணியின் பிரேம பக்தி ஒன்று மட்டுமே. உலகில் உள்ள அனைத்து பிரேம பக்தியின் மூலம் ஸ்ரீ மதி ராதா ராணியினுடையது என்று ஸ்ரீ சுகர் கூறுவார்.

🌸ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தில் வரும் ஹரே என்னும் சொல் ஸ்ரீமதி ராதா ராணியையே குறிக்கும்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

🌸இதில் என்னவொரு விந்தை என்றால் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா ராதாவினுடைய பிரேம பக்தியின் ஆழம் அறிவதற்காக மாயாப்பூரில் ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய மஹாப்ரபுவாக திரு அவதாரம் புரிந்து அதனை அனுபவித்தார். அப்பேற்பட்ட பக்தி ஸ்ரீ ராதாவினுடையது.

🌸விருந்தாவனத்தின் அம்பிகையாக ஸ்ரீ மதி ராதா ராணி விளங்குகிறாள். வ்ருந்தாவனம் முழுவதும் ஸ்ரீ மதி ராதா ராணி ப்ரபாவம்தான். மும்பையில் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது எப்படி ராம் ராம் என கூறுவார்களா அப்படி விருந்தவனத்தில் ராதே கிருஷ்ணா என்று கூறுவார்கள். 

🌸நாம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது ஸ்ரீ வ்ருந்தாவனம் சென்று ஸ்ரீமதி ராதா ராணியை தரிசனம் செய்ய வேண்டும்.

தப்த காஞ்சன கௌராங்கி  
ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு ஸுதேதேவி  
ப்ரணமாமி ஹரி-ப்ரியே

“பொன்னிற மேனியுடையவரும், வ்ருஷபானு மஹாராஜாவின் புதல்வியுமான ராதாராணியே, விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்குகின்றேன்.”
ராதே கிருஷ்ணா !!!!



Friday, August 21, 2020

ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் ஜெயந்தி (22-08-2020)


🌸ஆதி குரு ஸ்ரீ தத்தாத்ரேயர் கலியுகத்தில் எடுத்த முதன்மை அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர். மகா தபஸ்வி யதிகளில் ஸ்ரேஷ்டர். அபரிமிதமான பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே இவரை பற்றி நாம் சிறிதளவாவது அறிய முடியும். வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாமல் குப்தமாக மற்றும் சுக்ஷும ரூபமாக அருளும் பரம குரு.

🌸கி.பி. 1320 ஆண்டு ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹாராணிக்கும் (மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார். செவ்வாய் கிரஹத்தின் ஆதிக்கத்தில் சித்திரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கணேச சதுர்த்தி அன்று அவதரித்தார். எனவேதான் ஸ்ரீ கணேச சதுர்த்தி ஸ்ரீ ஸ்ரீ பாத வல்லபரின் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. பிறந்த குழந்தையின் கால்களில் மீன் மற்றும் ஆமை மற்றும் சங்கு போன்ற வடிவ ரேகைகள் இருந்தன. அப்படிப்பட்ட ரேகைகள் சாதாரண மானிடர்களுக்கு இருக்காது. தப்பித்தவறி யாருக்காவது சங்கு ரேகை இருக்க முடியும். அதைக் கொண்டவர்கள் பெரும் வித்வான்களாக இருப்பார்கள். ஆனால் கூர்ம அவதாரத்தைக் குறிக்கும் ஆமை மற்றும் மச்சாவதாரத்தைக் குறிக்கும் மீன் போன்ற உருவ ரேகைகள் மானிடர்களுக்கு இருக்காது.  அவை இரண்டும் பெரிய மகான்களாக உருவெடுக்க உள்ளவர்களுக்கும், தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கும்.

🌸ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் த்வாதச (12) ஆதித்யர்களை விட உயர்ந்தவர். அவரது உடல் அற்புதமான தெய்வீக அதிர்வுகளால் ஆனது. அனைத்து தெய்வங்களின் உருவமாகும்.இவரின் அற்புதங்களை ஸ்ரீ பாத வல்லப சரிதாம்ருதம் மிக மிக விரிவாக கூறுகிறது. மகா புண்ணியமான நூல் இது.

🌸ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஜில்லாவில் இயற்கை எழில் கொஞ்சும் பிட்டாபுரத்தில் உள்ளது குக்குடேஸ்வரர் திருக்கோவில். மகிமை வாய்ந்த 18 சக்தி பீடங்களுள் பத்தாவது பீடமாகவும் பாத கயா தலமாகவும் புகழ்பெற்ற பிட்டாபுரம் புராதன ஆலயங்களுக்குப் பெயர் பெற்ற நகரம்  சக்தியின் உடல் பாகத்தில் பிருஷ்ட பாகம் விழுந்த இடமாதலால் பீடிகாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி பிட்டாபுரம் ஆனது. இந்த பிட்டாபுரத்தில்தான் இவரின் மூல மஹாசமஸ்தானம் உள்ளது.

🌸33 கோடி ருத்ர கணங்களின் அதிபதி ஸ்ரீ கணபதி. தன்னிலுள்ள கணபதி தத்துவத்தை ஒரு யோக வழியில் உலகிற்கு வெளிப்படுத்தவே ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் கணேச சதுர்த்தி அன்று பூமியில் அவதரித்தார். ஆகையால் எவரொருவர் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபரை ஸ்மரணம் செய்து வழிபாடு செய்து பூஜை செய்கிறார்களோ அவருக்கு 33 கோடி ருத்ர கணங்களின் அருளும் கிடைக்கும்.

🌸ஆகையால் சித்திரை நக்ஷத்திரத்தில் அவரை பூஜித்தால் அனைத்து கிரஹ தோஷங்களும் நீங்கிவிடும். சித்திரை நக்ஷத்திரத்தின் பொழுது அல்லது செவ்வாய் கிழமைகளில் ஸ்ரீ பாதர் செந்நிறத்தில் ஜொலிப்பர். அவர் அன்று அருணாச்சலேஸ்வரராக ஜொலிப்பர். ஆகையால் செவ்வாய்கிழமை சித்திரை நக்ஷத்திரம் அன்று பூஜை செய்வது மிக மிக விசேஷமாகும், கன்னியர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், பூத பிசாசுகளின் தொல்லை நீங்கும். ச்ராவண மாத முழு பௌர்ணமியன்று ஸ்ரீ வாசவி கன்யா ஸ்ரீ பாதருக்கு ராக்கி அணிவித்த புண்ணிய தினம். அன்று பீடிகாபுரத்தில் இருப்பவர்களுக்கு சித்ர குப்தன் அதிக புண்ணியம் என எழுதுகிறார் என்று ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரிதாம்ருதம் இயம்புகிறது.

🌸இவர் கர்நாடக மாநிலத்தில் குருவபுரத்தில் ஜலசமாதி அடைந்தார் என்றும் இன்றும் சிரஞ்சீவியாக தன்னை வழிபடும் உண்மையான பக்தர்களுக்கு நெருக்கடியான தருணங்களில் தரிசனம் அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவராகவும் விளங்குகிறார். குரு  சரிதத்தின் படி, வல்லபேசன் என்னும் பக்தனுக்காக சூலம் ஏந்திய சிவ பெருமானாக அவனை கொன்ற கொடியவர்களை அழித்து மீண்டும் உயிர்ப்பித்த சக்தி மிக்கவர்.

🌸அபார தீர்க்க தரிசி. ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சமர்த்த ராம்தாஸ் சுவாமி, ஸ்ரீ இராமலிங்க அடிகள், ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரரின் அவதார ரஹஸ்யங்களை முன்பே கணித்து கூறியவர்.

புரட்டாசி மாதம் தேய்பிறை துவாதசி திதி ஹஸ்த நட்சத்திர நாளன்று கிருஷ்ணா நதியில் மூழ்கி ஜல சமாதி அடைந்தார் .

ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தன் அவதாரத்தை முடித்துக் கொண்டாலும் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் புரிகிறார் .

 தற்போது பக்தர்கள் புரட்டாசி மாதம் தேய்பிறை துவாதசி திதியன்று  வணங்கி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

🌸மூன்று நாட்களுக்கு இடைவிடாது ஸ்ரீ பாத நாமத்தை ஜெபிப்பவருக்கும் த்யானம் செய்பவருக்கும் ஸ்ரீ பாதர் ஸ்தூல உடலுடன்  எலும்பும் தோலுடன் தத்ரூபமாக தரிசனம் அளிப்பார். எப்படி ஸ்ரீ விநாய பெருமானை துதித்தால் சகல தேவதைகளை வணங்கின பலன் கிடைக்குமோ அப்படி ஸ்ரீ பாத வல்லபரை  வணங்கினால் சகல குரு மூர்த்தங்களை வணங்கின பலன் கிடைக்கும்.

ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !

                 திகம்பரா திகம்பரா ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

(இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும்  ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)