Monday, March 29, 2021

ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் ஆராதனை - 30.03.2021 (செவ்வாய் கிழமை)

ஸ்ரீமத்வ மடயதிகளில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தருக்கு என்றும் ஓர் சிறப்பான இடம் உண்டு. பழுத்த த்வைத ஞானி. அபார ஞானம் உடையவர். இவர்தான் அகிலம் போற்றும் ஒப்பற்ற மகானாக விளங்கிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளுக்கு குருவாக விளங்கியவர் என்றால் இவரின் மேதா விலாசம் நமக்கு நன்கு விளங்கும். 18 க்ரந்தங்களுக்கு மேல் எழுதியவர். இவரின் குருதான் ஸ்ரீமத்வ மதம் புகழும் ஆய கலைகள் 64கிலும் வல்லவரான ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர். இவரின் ஸ்வப்னத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் கட்டளைக்கிணங்க தனக்கு பிறகு அடுத்த மடாதிபதியாக ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளை நியமித்தவர்.

மிகவும் வறுமையின் பிடியிலிருந்த ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் இவரின் ஸ்ரீமடம் (கும்பகோணம்) அடைந்த பிறகுதான் முன்னேற்றம் கண்டார். இவர்தான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளுக்கு  “சுதா” என்ற பாடத்திற்கு அபூர்வ விளக்கம் எழுதியமையால்  "ஸ்ரீ பரிமளாச்சார்யார்"  என்ற நாமம் சூட்டியவர்.

ஸ்ரீ சுதீந்திரர் தன் பூர்வாஸ்ரம பந்துவான ஸ்ரீ வாசுதேவசாரியாரின் மகள் சரஸ்வதி தேவியை வேங்கடநாதனுக்கு முன்நின்று மணம் முடித்து வைத்தார்.

1623ல் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் ஆனேகுந்தியில் நவ பிருந்தாவனம் என்னும் இடத்தில் பிருந்தாவனஸ்தரானார். 






 

Saturday, March 27, 2021

பகவான் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு (கௌரபூர்ணிமா) அவதரித்த சுபதினம் - 28-03-2021

                           ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு 1407 ஷகாப்த வருடம் (கிபி 1486) பால்குன மாதத்தின் பௌர்ணமி நாள் இரவில்  மேற்கு வங்காளத்திலுள்ள மாயாப்பூரில் ஜகன்னாத மிஸ்ரா சச்சிதேவிக்கு ஸ்ரீகிருஷ்ணரின் கலியுக அவதாரமாக பிறந்தார். விஸ்வம்பரர்/விஸ்வரூபர், நிமாய் மற்றும் பொன்னிற மேனியராய் இருந்ததினால் கௌரங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் முழு சந்திர க்ரஹணத்தின் போது ஜனித்தார்.

பௌர்ணமாஸ்யாம் பல்குணஸ்ய பால்குனி-ரக்ஷ-யோகத:பவிஷ்யே கௌர ரூபேண ஷஷி -கர்பே புரந்தராத்

ராதையும் ஸ்ரீக்ருஷ்ணரும் இரு தேகத்தில் விளங்கிய ஒரே ஆத்மாக்களாக ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யராக பிறந்துள்ளார். (சைதன்ய சரிதாம்ருதம் 1.1.5). ஸ்ரீராதையின் ப்ரேம ராஸலீலை என்னும் பரவச நிலையிலேயே அனவரதமும் இருந்தார்.

ஹரே க்ருஷ்ண மஹாமந்த்ரத்தை பிரகடனப்படுத்தியவரும் இவரே. இவரின் காலத்தில்தான் க்ருஷ்ண /ஹரி நாம கீர்த்தணங்கள் செழுத்தோங்கி வளர்ந்தது.

இவரின் பாதத்தில் பகவான் விஷ்ணுவின் சின்னங்களான கொடி, வஜ்ரம், சங்கு, சக்கரம், மீன் ஆகியவை காணப்பட்டன என்று ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் (1.14.7) தெரிவிக்கின்றது.

500 வருடங்களுக்கு முன்னர் இவர் உருவாக்கிய ஹரே க்ருஷ்ண மஹாமந்திரம்  10000 வருடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகின்றது. கலியின் கோர பிடியிலிருந்து மக்களை காப்பாற்றி காம எண்ணங்களை அழித்து பகவத் சிந்தனையில் நிலை பெற செய்யும் ஒரே சாதனம்  ஸ்ரீ ஹரே க்ருஷ்ண மஹாமந்திரம் என்று ஸ்ரீமத் பாகவாதமும் உரைக்கின்றது.

ஸ்ரீசைலக்ஷேத்ரத்தில் சிவபெருமானும் பார்வதிமாதாவும் ப்ராஹ்மண உடையில் வாழ்ந்து பலரஹஸ்ய விஷயங்களை பேசி ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவிற்கு உத்தரவு அளித்தவுடன் அவர் ஸ்ரீ பூரிக்ஷேத்ரத்திற்கு சென்றார். ( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 9.175-177)

ஈஸ்வரபூரி இவருக்கு தீக்ஷை அளித்து ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்படி போதித்தார்.

கேஸவபாரதீ என்ற சந்நியாசி நவத்வீபத்தில் ஸ்ரீசைதன்யருக்கு சன்யாசம் வழங்கினார். மற்ற மக்களை க்ருஷ்ண உணர்விற்கு தூண்டக்கூடியவர் என்ற பொருள் கொண்ட "ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்" என்ற சந்யாச நாமத்தை கேஸவபாரதீ அவருக்கு அளித்தார்.

அஹோபிலம், திருப்பதி, ஸ்ரீசைலம், காஞ்சி, ஸ்ரீரங்கம், மதுரை, கும்பகோணம், தஞ்சை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற பல தென்னிந்திய புண்ணியத்தலங்களுக்கு சென்று மக்களுக்கு ஸ்ரீமத் பாகவதமும், ஹரே க்ருஷ்ண மஹாமந்திரத்தின் அவசியத்தையும் இரவு பகல் பாராது பரப்பி மகத்தான சேவை புரிந்தார்.

பூவுலகில் தனது இறுதி 18 வருடங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு பூரியில் ஸ்ரீ ஜகன்னாதருடனே கழித்தார்.

ஒருநாள் பூரியின் கடற்கரைக்கு அருகாமையிலுள்ள டோடா-கோபிநாதர் கோயிலுக்கு அருகில் தனது பக்தர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே திடீரென்று கோயிலுக்குள் விரைவாக சென்று ஸ்ரீகோபிநாத் விக்கிரஹத்தினுள் ஐக்கியமானார்.

 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.





 

Friday, March 19, 2021

ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளின் 426வது (1595-2021) அவதார தினத் திருவிழா - 20.03.2021 (சனிக்கிழமை)

கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி "ஸ்ரீ ஹரியே சர்வோத்தமன் வாயு ஜீவோத்தமன்" என்னும் த்வைத மத கொள்கையை ஆணித்தரமாக வலியுறுத்தி இப்பாரதம் கண்ட மிக சிறந்த புனித மஹானாக பிறந்து மந்த்ராலயம் என்னும் புனித க்ஷேத்ரத்தில் ஜீவனோடு ப்ருந்தாவனப்ரவேசம் செய்து மக்களின் இன்னல்களை அல்லும் பகலும் தீர்த்து ப்ரத்யக்ஷ குருவாக இந்த கலியுகத்தில் விளங்குகிறார். யதிகளிலேயே ஸ்ரேஷ்டர்.  முக்காலமும் உணர்ந்த அபரோக்ஷ ஞானி.

த்வைத மத குருமார்களில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளுக்கு என்றும் தனி இடம் உண்டு. இன்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அதிகம் வணங்கப்படும் குருவாக உள்ளார்.

இவரின் பரம குரு (குருவின் குரு ) ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர்.இவர் ஆய கலை 64 நான்கிலும் வல்லவர். இவரின் பிருந்தாவனம் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ளது. இவரின் சிஷ்யர் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர். இவரின் சிஷ்யர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர். இதில் என்னவொரு விந்தை என்றால் இவரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வ்யாசதீர்த்தரின் சிஷ்யர்தான்  ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர். அவர் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக அவதாரம் புரியும் பொழுது ஸ்ரீ  விஜயீந்திர தீர்த்தர் இவரின் பரம குருவாகிறார். என்னவொரு விந்தை பாருங்கள். குருவே சிஷ்யனாக சிஷ்யனே குருவான விந்தை. நமது கற்பனைக்கும் எட்டாத அற்புதம்.

"தேவெரெந்தரெ திருப்பதி திம்மப்பனு...

குருகளெந்தரெ மந்த்ராலய ராகப்பனு..."

(எப்படி  தெய்வம் என்றால் திருப்பதி வெங்கடாசலபதியை குறிக்குமோ அதுபோல் குரு என்றால் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை மட்டும்தான் குறிக்கும்)

"சங்கு கர்ணாக்ய தேவஸ்து பிரம்ம சாபாஸ்ய பூதலே

ப்ரஹ்லாத இதி விக்ஷ்யாதோ பூபாரக்ஷ பனே ரதஹ

ச ஏவ ராகவேந்த்ராக்ஷ யதிரூபேண சர்வதா

கலவ்யுகே ராமசேவா குர்வன் மந்த்ராலயே பவத்"

                                - ந்ருஸிம்ஹ புராணம்

ப்ரஹ்மலோகத்தில் விளங்கிய ஸ்ரீ சங்குகர்ணன் என்னும் தேவதை ப்ரஹ்மனின் விஷ்ணு பூஜைக்கு தாமதமாக பூ மற்றும் பூஜா த்ரவ்யங்களை கொண்டு வந்ததினால் ப்ரஹ்மதேவனால் சபிக்கப்பட்டு க்ருத யுகத்தில் ஸ்ரீ ப்ரஹ்லாதராகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ பாஹ்லீகராஜாவாகவும், கலியுகத்தில் இரண்டு அவதாரங்கள் முறையே ஸ்ரீ  வ்யாஸராய தீர்த்தராகவும், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகவும் அவதாரம் புரிந்து கற்பக வ்ருக்ஷமாகவும், காமதேனுவாகவும் என்றும் ஜீவனோடு விளங்கி மக்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார்.

தமிழகத்தில் தென்ஆற்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள புவனகிரியில் திம்மண்ண பட்டர் - கோபிகாம்பாள் தம்பதியருக்கு பால்குணஸுக்ல சப்தமி திதி குருவாரம் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் திருமலை வேங்கடவனின் திருவருளால் 1595 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்தவுடன் அநேக சுப சகுனங்கள் தோன்றின.  இவரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வ்யாஸதீர்த்தர் திருப்பதி வேங்கடவனை 12 ஆண்டுகள் பூஜை செய்யும் மஹாபுண்ணியம் கிடைத்தது. அதன் பலனால்தான் என்னவோ அந்த வேங்கடவன் அருளால் அதே வ்யாசராஜ தீர்த்தர்  தனது அடுத்த அவதாரத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளாக பிறந்தார்.

"வருங்காலத்தில் மாஞ்சால கிராமம் உலக புகழ் பெற்றதாக அமையும். புகழ் பெற்ற ஒருவரின் ஜீவ சமாதியால் அது புகழ் பெரும்" என்று ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரிதாம்ருதத்தில் 20-ஆம் அத்தியாயத்தில் 13ஆம் நூற்றாண்டிலேயே இவரின் பிறப்பை பற்றி கணித்து கூறப்பட்டதென்றால் இவரின் அபார கீர்த்தி நமக்கு நன்கு விளங்கும்.

சாலிவாகன சகம் 1671 ஆம் ஆண்டு விரோதிகிருது வருடம், ச்ராவண மாதம், க்ருஷ்ணபக்ஷம், த்விதீயை,வியாழக்கிழமை ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா தனது கரங்களினால் பிடித்து ஜீவனோடு துங்கபத்திரா நதிக்கரையினில் அமைந்துள்ள ஸ்ரீ மந்த்ராலயம் என்னும் க்ஷேத்திரத்தில் பிருந்தாவன பிரவேசம் செய்தார்.

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||