Thursday, September 24, 2020

ஜகத் குரு பகவன் ஸ்ரீ நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய சரிதம்


 

யுகங்கள் பொதுவாக 4 வகையாக நமது ஹிந்து தர்மம் கூறுகிறது.
1. க்ருத
2. த்ரேதா
3. துவாபர
4. கலி

இந்த கலியுகத்தின் கோர பிடியிலிருந்து நம்மை ரக்ஷிக்க ஒரு எளிய உபாயத்தை நமது முன்னோர்கள் வகுத்தனர். அதுதான் "நாம சங்கீர்த்தனம்" அல்லது "நாம ஜபம்".

குறிப்பாக நாம சங்கீர்த்தனத்தில் "ராம", "கிருஷ்ண", "நமசிவாய" மற்றும் "ஹரி, நாராயண" மந்திரங்களே பெரும்பாலும் சொல்லப்படும்.

நாம ஜபம் என்பது மிகவும் எளிய உபாயம்தான். அனால் அது அவ்வளவு சுலபமும் அல்ல. நாம ஜபம் என்பது மனம் ஒருமுக நிலையில் ஒரு குறிப்பிட்ட கடவுளின் மந்திரத்தை லக்ஷ கணக்கில், கோடி கணக்கில் ஜபித்து அம்மந்திரத்தை உருவேற்றி, அத்தெய்வீக மந்திரத்தின் அதிர்வலைகள் பரிபூர்ணமாக வியாபித்து, அம்மந்திரத்தின் தேவதை ப்ரத்யக்ஷமாகி அனுகிரஹித்து, அதன் மூலம் மக்களை நல்வழிப்படுத்தி, நமது புராண, கலாச்சாரத்தின் மஹிமையை உணர்த்தி, அறியாமையின் பிடியிலிருந்து விடுவித்து, நமது பாரதத்தின் ஆணிவேரான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், இறை உணர்வையும் வளர்க்க அந்தந்த காலகட்டங்களில் இறைவன் தன்னை வெளிப்படுத்திய தவறியதில்லை.

எத்தனையோ மஹான்கள் நமது சனாதன தர்மத்தை ரக்ஷிக்க, அந்நியரின் கோர பிடிலியிருந்து நமது தர்மத்தையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், திருக்கோயில்களையும் மீட்டு இன்று நமது ஹிந்து மதம் மற்ற அனைத்திற்கும் ஒரு முன்னுதாரமாக இருந்ததில் நமது முன்னோர்களின் பங்கு, தியாகம், சிரத்தை வார்த்தைகளால் வருணிக்க முடியாதது.

கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே நாம் உய்யும் ஒரே வழி.

அப்படி நாம ஜெபத்தை தமிழகத்தில் பிரபல்யப்படுத்திவர்களில் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் முக்கியத்துவம் பெறுகிறார்.

பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்னும் சிறப்பு பெற்றவர். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் மற்றும் ஸ்ரீ வேங்கடேச ஐயாவாள் இவரின் சமகாலத்தவர்கள்.

திரு அவதாரம்
கேசவ பாண்டுரங்கன் - சுகுணா தம்பதியருக்கு ஆதி சங்கர பகவத்பாதரின் அம்சமாக 1610 இல் கலியுக ஈஸ்வரனாக திருஅவதாரம் புரிந்தார். இவரின் இயற்பெயர் புருஷோத்தமன்.
இவரின் குரு ஸ்ரீ ஆத்ம போதேந்திரர் என்னும் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். பரம அத்வைதி. மஹா ஸ்ரேஷ்டர். இவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 58 வது பீடாதிபதி. இவரின் பிருந்தாவனம் விழுப்புரம் அருகில் “வடவாம்பலம்” என்னும் இடத்தில் இருக்கிறது. இவரது பிருந்தாவனத்தில் நித்யம் "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" என்று ஒலித்து கொண்டே இருக்கும். த்யானம் செய்ய ஏற்ற அருமையான இடம்.

இவரின் தீக்ஷண்யத்தை ஞான திருஷ்டியால் அறிந்த குரு ஆத்ம போதேந்திரர் இவருக்கு ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் திருநாமம் சூட்டி காஞ்சி காமகோடி பீடத்தின் 59 ஆவது பீடாதிபதியா க்கினார். இவர் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த காலம் 1638-1692 (54 ஆண்டுகள்).

இவர் தினமும் 1,08,000 ராம நாமஜபம் செய்வார். ஆதலால் இவரின் வாக்கில் கலைவாணியின் சாந்நித்யம் இருந்தது. ராம நாம மகிமையை, ராம நாம ஜெபத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை பஜனை சாம்ராஜ்யத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தியதில் முதலிடம் பெறுபவர் இவரே. இவரும் திரு விசயநல்லுர் ஸ்ரீ வேங்கடேச ஐயாவாள் இருவரும் இணைந்தே கிராமம் கிராமமாக ஊர் ஊராக சென்று நாம ஜெபத்தை மக்களிடையே பரப்பினர். இவரால்தான் ராம நாம ஜபம் தமிழகத்தில் அதி விரைவாக பரவியது.

அற்புதங்கள்
1. ஒரு சமயம் இருவரும் இணைந்து நாம ஜபம் செய்யும் பொழுது ஓர் பிராம்மண தம்பதியின் வீட்டிற்கு சென்று அவர்களின் பிக்ஷயை ஏற்று காது கேளாத வாய் பேசாத அத்தம்பதியின் குழந்தை இவர் உண்ட மிச்ச அன்னத்தை உண்டு அபார ஞானம் பெற்று பேசும் திறன் பெற்றான். இது எப்படி சாத்தியம் என்றால் நித்யம் பகவான் நாமங்களை உச்சரிக்கும் மஹானுபவர்களின் வாக்கில் சரஸ்வதி வாசம் புரிவதனால் அவர்களின் மிச்ச உணவு அதி திவ்யமான அமிர்த ப்ரசாதமாகும்.

2. இவர் யாத்திரை செல்லும் வழியில் ராம நாம ஜபத்தின் மஹிமையை உலகிற்கு உணர்த்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மிலேச்சர்களால் கவரப்பட்ட ஒரு பத்தினியின் பாவம் நீக்கி அவளை பரிசுத்தமாக்கி ராம நாம ஜபத்தின் மஹிமையை உணர்த்தினார். தாரக மந்த்ரமாகிய ராம நாம ஜெபத்தின் மூலம் செயற்கரிய காரியங்கள் பகவத் சங்கல்பத்துடன் நிகழ்த்தியதால் இவர் "ஸ்ரீ ராம நாம போதேந்திரர்" என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் ஜீவனோடு ப்ருந்தாவனஸ்தரானதால் இவரின் பிருந்தாவனத்தில் நித்யம் ராம் ராம் என்று பகவதோத்தமர்கள் அகண்ட ராம நாம ஜபம் செய்வர். கோவிந்தபுரத்தில் அனைத்து ஊரிலிருந்தும் வந்து ராம  நாம ஜெப தீக்ஷை எடுத்து செல்வது வழக்கம்.

இவரது பிருந்தாவனத்தை அடையாளம் காட்டியவர் "மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள்". இவருக்கு நாம் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம் ஏனென்றால் இவர் இல்லையென்றால் நம்மால் போதேந்திரரின் பிருந்தாவன ப்ரதிஷ்டாபனம் என்பது சாத்தியமில்லை. இவரின் காலம் 1777-1817.

கோவிந்தபுரம் அதிஷ்டானம்
கும்பகோணத்தில் திருவிடைமருதூரை அடுத்த கோவிந்தபுரம் என்னும் புனித தலத்தில் இவரின் அதிஷ்டானம் உள்ளது. காவேரி அன்னையின் மடியில் ராம-சீதா தர்பாரின் நுழைவாயிலின் முகப்போடு முதலில் ஸ்ரீ ஹனுமானின் விஸ்வரூப தரிசனம். ஆஞ்சநேயரை தரிசித்து நுழைந்தால், ஆஞ்சநேயரின் சந்நிதி மேல் நாம/பஜனை சம்பிரதாயத்தின் ஆணிவேராக விளங்கிய, ஸ்ரீ போதேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள், நாராயண தீர்த்தர்,  விஜயதாசர், கோபாலதாசர், புரந்தரதாசர், ஜயதேவர், பத்ராசல ராமதாசர் ஆகியோரின் அதியற்புத சிற்பங்கள் தரிசிப்பது பரம புண்ணியம். பூர்வ ஜென்ம புண்ணியம் மற்றும் பகவத் சங்கல்பம் இருந்தால் மட்டுமே நம்மால் இவரின் ஜீவ பிருந்தாவனம் செல்ல முடியும்.

அடுத்து நாம் செல்ல இருப்பது கலியுக ஈஸ்வரனான ஸ்ரீ போதேந்திராள் துளசி மாட அதிஷ்டானம். காவேரியில் ஸ்நானம் செய்து மடியோடு போதேந்திராள் பிருந்தாவனத்தை ராம நாம ஜெபத்துடன் ப்ரதக்ஷிணம் செய்வது அதி ஸ்ரேஷ்டம். நம்மையும் மீறி ஒரு சாந்தம், தெய்வீக அநுபவம் பற்றிக்கொள்வது நிதர்சனம். இவருக்கு செய்யும் பாதுகா பூஜை மிகவும் விசேஷம். ஸ்ரீ போதேந்திராள் பிருந்தாவனத்தை சுற்றியும் பாககவதோத்தமர்களான ஸ்ரீ வ்யாஸர், சுகர், சதாசிவ பிரம்மேந்திரர், ஜெயதேவர், நர்சி மேத்தா, மகா பெரியவா, ராம  நாம புத்தக அறை என்று எங்கெங்கு காணினும் குருவின் சாந்நித்யம்தான். நம்மையும் மீறிய ஒரு அபூர்வ அதிர்வலை நிச்சயம் ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானத்தில் நிச்சயம் ஏற்படுவதை உணர முடியம். அடியேன் முதன் முறையாக 19-09-2020 அன்று சென்று வந்து அடைந்த பேரின்பத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது. அதன் ஒரு மிக மிக சிறு அனுபவத்தைத்தான் தங்களிடம் பகிர்ந்துள்ளேன்.

போதேந்திராள் அதிஷ்டானத்தை அடுத்து கோசாலா. இங்கு ஆநிரைகளை காண்பது மனதிற்கு மகிழ்ச்சியையும், சாந்தத்தையும் ஏற்படும். இங்கிருக்கும் அகத்திக்கீரையை பசுவிற்கு உணவாக அளிப்பது மிகவும் புண்ணியம். ஏனென்றால் கோமாதா ஸாக்ஷத் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமல்லவா!!. இந்த கோசாலையில் காஞ்சி காமகோடி பீடாதிபத்யத்தை அலங்கரித்த மஹாநுபாவர்களின் பட்டியலை மிக துல்லியமாக நமது பார்வைக்கு வைத்துள்ளனர். நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம் இது.

இவரின் பிருந்தாவனத்தை அடுத்து ஸ்ரீ நாம கேந்திரம் என்ற ஓர் இடம். இவ்விடம் ஓர் மிக புண்ணிய இடமாகும். இங்குதான் 1008 கோடி முறை ராம நாமம் எழுதிய ராம நாம வங்கி உள்ளது இதை ஓர் நூலகமாக அமைத்து பொக்கிஷமாக வைத்துள்ளனர். மக்கள் இங்கு வந்து ராம நாம வங்கியை ப்ரதக்ஷிணம் செய்வதை மிகவும் புண்ணியமாக கருதுகின்றனர்.

அதிஷ்டானத்தை சுற்றியுள்ள கோவில்கள்
சைதன்ய குடீரம், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயில், காஞ்சி மஹாபெரியவா தபோவனம், இரட்டை ஆஞ்சனேயர் திருக்கோயில், காசி விஸ்வநாதர் கோயில், பாண்டுரங்கன் கோயில், யோகி ராம் சுரத் குமார் ஆசிரமம், ஸ்ரீ ஞானானந்த பாதுகா மடம்.

ஈஸ்வரப்ராப்தி அடைதல்
இவர் 1692 ஆம் ஆண்டு பூர்ணிமை திதி பாத்ரபத மாதம் பிரஜோத்பத்தி வருடம் விதேகமுக்தி அடைந்தார் என்றும் இவரின் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராம நாம ஜபம் கேட்பதாக பலரும் கூறியுள்ளனர்.

ஸ்ரீ போதேந்த்ராஷ்டகம்

1. ஸ்ரீமந் போதேந்த்ர யோகீந்த்ர
தேஸிகேந்த்ர நமோஸ்துதே !
ஸர்வலோக ஸரண்யஸ்த்வம்
நாம பக்திம் ப்ரயச்ச மே !!

2. த்வம் தாதா ஞானரத்னஸ்ய
த்வம்  த்ராதா ஸ்வஜனஸ்யச !
த்வம் மாதா நிஜஸிஷ்யாணாம்
நாமபக்திம் ப்ரயச்ச மே !!

3. ஸ்ரீ மந்ந பீஷ்ட பலத
ஸ்வாமின் ஸம்ஸாரதாரக!
ஜகத்குரோ ஜகந்நாத
நாமபக்திம் ப்ரயச்ச மே !!

4. பகவந்நாம ஸாம்ராஜ்யப்ரபோ
மாம் ஸரணாகதம் !
ஸமுத்தர்தும்  க்ருபாஸிந்தோ
நாமபக்திம் ப்ரயச்ச மே !!

5. குரும் ப்ரபத்யே லோகானாம்
த்வாமேவ கருணாலயம் !
க்ருபா கடாக்ஷ  லேஸேன
நாமபக்திம் ப்ரயச்ச மே !!

6. ஸம்ஸாரார்ணவமக்னஸ்ய
நான்ய: பந்தா மம ப்ரபோ!
தஸ்மாத் குர்வன் மயிக்ருபாம்
நாமபக்திம் ப்ரயச்ச மே !!

7. ஸரண்யம் கில நாமேதி
பவதா நஸ்சிதம் மதம் !
நீசானாமபி தஸ்மாத் த்வம்
நாமபக்திம் ப்ரயச்ச மே !!

8. அக்ஞானத்வாந்த முக்தஸ்ய
மம த்வம் பாஸ்கரோ யதா !
மார்கதர்ஸீ மஹாபந்து :
நாமபக்திம் ப்ரயச்ச மே !!

9. ஏவம் போதேந்த்ர பாதாப்ஜ
ப்ரேம போகப்ரதாயகம்!
அஷ்டகம் ய : படேந்நித்யம்
தஸ்ய நாம ப்ரஸீததி!!

திருக்கோயில் அமைவிடம்
சத்குரு ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம்
ஸ்ரீ மடம் சமஸ்தானம் கோவிந்தபுரம் 612 101, தஞ்சை ஜில்லா - தமிழ்நாடு

"குரோ:அநுக்ரஹேண ஏவ புமான்
பூர்ண: ப்ரஷாந்தயே"

- ஸ்ரீ மத் பாகவதம்

(குருவின் அனுகிரஹத்தால் மட்டுமே மனிதன் பரிபூர்ண சாந்தியை அடைகிறான்)

"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"!!!

 

Thursday, September 10, 2020

மஹாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாள் (11-09-2020)


நமது பாரத நாடு அந்நிய கொள்ளையர்களின் ஆதிக்கத்தில் சிக்கி தவித்த பொழுது, அஹிம்சயினால் மஹாத்மா காந்தியும், ஆயுத போராட்டத்தினால் சுபாஷ் சந்திர போஸும் போராடி கொண்டிருந்த பொழுது, தன்னுடைய கவிதைகளினால் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தினை ஆட்டம் கான வைத்தவர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.

அந்த கலைமகளே முண்டாசு மீசையுடன் தோன்றினளோ என்பதற்கேட்ப சிறுவயது முதலே அபார புலமையும் கவிதை புனையும் ஆற்றலுடனும் விளங்கினார். சரஸ்வதிக்கு பாரதி என்றொரு பெயரும் உண்டு. என்னவொரு ஒற்றுமை நமது கற்பனைக்கும்  எட்டாத விந்தை. பாரதி என்றாலே நம்மையும் மீறி ஒரு தேசப்பற்றும், தேசிய உணர்வும் தோன்றுவதென்றால் அது மிகையாகாது. மஹாகவியின் கவிதைகளை படித்தால் கோழைக்கும் வீரம் வரும், மூடனும் மேதாவியாகி கவிதை புனைவான். இவர் ஏற்படுத்திய சுதந்திர தாகம், வேட்கை இன்றும் நம்மால் உணர முடிகிறதென்றால் அது நம் பாரதிக்கு மட்டுமே சாத்தியம்.

பிறப்பு

பாரததாயின் ஒருமகனாய் பராசக்தியின் திருமகனாய் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு 11-12-1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். தன்னுடய சிறு வயதில் அன்னையை இழந்தார்.

கம்பனிற்கு பிறகு தமிழ் மொழியில் ஒரு புரட்சி, மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரே தமிழ் புலவர் மஹாகவி சுப்ரமணிய பாரதி மட்டுமே.

திருமணம்

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பட்டங்கள்

இவரது கவிபாடும் அபார புலமையை அறிந்து எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்னும் பட்டத்தை அளித்தார்.

இவருக்கு மகாகவி என்னும் பட்டத்தை அளித்தவர் வ. ராமசாமி ஐயங்கார்.

ஆசிரியர் பணி

சுதேச மித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகவும் மற்றும் இந்தியா  என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து இது தவிர மற்ற பல பத்திரிகைகளிலும் பணியாற்றி ஓய்வின்றி நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்.

சுப்ரமணிய பாரதியார் நடத்திய இந்தியா பத்திரிகையில் 1907 சித்திரை 1 தமிழ் வருட பிறப்பு அன்று வெளியான கருத்துப்படம்.

எழுத்துப்பணி

பாப்பா பாட்டு, கண்ணன் பட்டு, குயில் பட்டு, புதிய ஆத்திச்சூடி, பகவத் கீதையின் உரை, தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம் என்ற அழியா புகழ் பெற்ற பல காவியங்களை படைத்தார். பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதினர். பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்.

இவரின் கவிதைகளினால் ஈர்க்கப்பட்டு கனகசபை சுப்புரத்தினம் என்பவர் தன்னுடைய பெயரை “பாரதிதாசன்” என்று மாற்றி பின்னாளில் “பாவேந்தர் பாரதிதாசன்” என்று புகழ் பெற்றார்.

இவரின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி ஐயர்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

நண்பர்கள்

பாலகங்காதர திலகர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். அரவிந்தர், சுப்ரமணிய சிவா, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர் இவரின் உற்ற நண்பர்கள்.

விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா இவரின் ஆன்மீக குரு.

மொழிப்புலமை

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்க்ரிதம், வங்காளம் ஆகிய பண்மொழி புலமை பெற்றிருந்தார்.

கவிதையில் சுய சரிதம் எழுதிய முதல் கவி இவர்.

சமூக சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி

இன்றைய காலகட்டத்தில் நிலவும் அசாதரணமான உணர்திறன் மிக்க விஷயங்களான தீண்டாமை, பெண்ணடிமை, பெண்ணியம், மூட நம்பிக்கைகளை அன்றே (100 ஆண்டுகளுக்கு முன்பே) சாடி சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்திய வீர தமிழன் எங்கள் பாரதி.

“வந்தே மாதரம்” என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.

ஆத்திகம், பகுத்தறிவு, தீண்டாமை, பெண்ணியம், மூட நம்பிக்கை என அனைத்திலும் முத்திரை பதித்து மக்கள் மனதில் அமரகவியாக சிம்மாசனம் ஏற்று வீற்று இருப்பதினால் "மஹாகவி", "தேசியக்கவி", "முண்டாசுக்கவி" என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

அந்நாளிலேயே தனக்கென்று ஓர் அடையாளத்தி ஏற்படுத்தி, முண்டாசுடனும், முறுக்கு மீசையுடனும் கம்பீரமான தோற்றத்துடன் விளங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய முதல் கவி இவர் ஒருவர் தான்.


இவரின் அமரத்துவம் வாய்ந்த வரிகள்

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்”

“ரௌத்திரம் பழகு”!!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

“தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

“காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்”

இந்திய சுதந்திரம் மட்டுமில்லாதது பெண் சுதந்திரத்திற்காகவும்  போராடியவர். இன்றும் பல புதுமை பெண்களுக்கு மஹாகவி பாரதிதான் முன்னோடி.  ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்று அன்றே முழங்கிய தீர்க்கதரிசி.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”

“எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!”

“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே”

என்னவொரு வீறுகொண்ட வரிகள். முதன் முதலில் பெண் விடுதலைக்கும்,  மூட நம்பிக்கைக்கும் போராடிய சிறந்த போராளி இவரை விட இந்நாட்டினில் இல்லை.

தீண்டாமைக்கு எதிராக முதலில் தனது பாடல்கள் மூலம் சீர்திருத்தத்தை ஏற்படுத்தி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

“சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”.

புரட்சிகரமான கவிதைகளினால் மட்டுமில்லாமல் மென்மையாக கவிதை புனைவதில் இவருக்கு நிகர் இவ்வுலகினில் இல்லை. இன்று பெரும்பாலான கவிஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பெண்ணியம் பேசுபவர்களுக்கும் இவரின் பாடலை தொடாமல் மேற்கோள் காட்டாமல் எழுதுவது சாத்தியமில்லை.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா!

“நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ”!

“காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே”!

பெண்ணியத்திற்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் தன்னுடைய பாடலின் மூலம் அறிவுரை வழங்குவதில் பாரதிக்கு நிகர் எவரும் இல்லை.

ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு – என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

ஆஹா என்னவொரு ஆழ்ந்த சொற்சுவை, பொருள் சுவை.

கைது

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறி  பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது செய்யப்பட்டார் பாரதியார். 34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார்.

வரலாற்று சந்திப்பு

வறுமையில் சில காலம் வாழ்ந்த பாரதியார், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகாகவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

மறைவு 

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

நினைவிடம்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்ணியத்தின் கண்ணியம் காத்தவன்
தேசியத்தின் தேகம் காத்தவன்
பாடல்களினால் பாரதம் காத்தவன்
ஆங்கிலேயர்களை ஆட்டம் கான வைத்தவன்
தீண்டாமையை திட்டி தீர்த்தவன்
மூடநம்பிக்கையை முட்டி தள்ளியவன்
சாதியை சாடியவன்
கண்ணனுடன் கலந்துரையாடியவன்
குயில் காக்கைகளுடன் கீதம் இசைத்தவன்
காணும் இடமெல்லாம் பராசக்தியை கண்டவன்
வறுமை வாட்டியபோதும் வற்றாத வளமையுடன் கவிதை பாடியவன்
தமிழ்த்தாயின் தலைமகன் எங்கள் பார(தீ) !!!!!!

“வந்தே மாதரம்”