Saturday, June 20, 2020

ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ தீர்த்தர் (1412 – 1502)




அவதார நோக்கம்
நம்முடைய பாரத தேசம் சனாதன தர்மத்திலும் இறை வழிபாட்டிலும் தன்னிகரில்லா தனி தன்மையுடன் திகழ்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ரிஷிகளும் மஹான்களும் தான். அதில் மூன்று மதங்கள் பிரதானமாக விளங்குகிறது. அத்வைதத்தை      ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதரும், விசிஷ்டாத்வைதத்தை ஸ்ரீ ராமானுஜரும், த்வைதத்தை ஸ்ரீமன் மத்வசார்யரும் ஸ்தாபித்தனர். "ஹரி ஸர்வோத்தமன் வாயு ஜீவோத்தமன்" என்ற மத்வ மத த்வைத சித்தாந்தம் தன்னிகரில்லா தனி சிறப்புடன் விளங்குகிறது என்றால் அதற்கு மிக மிக முக்கியமான காரணம் பின்வரும் 6 யதிகள் தான்.

v  ஸ்ரீமன் மத்வசார்யர் (பீமனின் அவதாரம்)
v  ஸ்ரீ ஜெயதீர்த்தர் (அர்ஜுனனின் அவதாரம்)
v  ஸ்ரீ பாதராஜ தீர்த்தர் (பக்த த்ருவ அவதாரம்)
v  ஸ்ரீ வ்யாசராஜ தீர்த்தர் (பக்த ப்ரஹ்லாத அவதாரம்)
v  ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் (லதவ்ய என்னும் ருஜு தேவதை அவதாரம்)
v  ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் (ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு)
v  ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் (பக்த ப்ரஹ்லாத அவதாரம்)

அப்படி மத்வ மதம் கண்டெடுத்த வைரம் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ தீர்த்தர்.

ஸ்ரீ பாதராஜரின் வரலாறு நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை படிக்கும் போது, இப்படியும் ஒரு மஹான் வாழ்ந்தாரா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இவர் பக்த த்ருவனின் அவதாரமாக கருதப்படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்கள் நிச்சயம் த்ருவனை பற்றி அறிந்திருப்பார்கள். 

இளவரசர் த்ருவன் தனது ஐந்து வயதில் தனது தந்தை (மன்னர்) உத்தானபாதர் மடியில் உட்கார விரும்பினார். ஆனால் அவரது தந்தை மீது மிகுந்த செல்வாக்கை செலுத்திய அவரது மற்றொரு மனைவியான சுருச்சியால் அவருக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டது. இதைக் கண்டு மனம் உடைந்த அவர், தனது விருப்பத்தை நிறைவேற்ற ஸ்ரீமன் நாராயணனிடம் பிரார்த்தனை செய்யும் படி தனது சொந்த தாய் சுனிதியால் அறிவுறுத்தப்பட்டார். அதன்படி, ஸ்ரீமன் நாராயணரிடம் பிரார்த்தனை செய்ய த்ருவன் அடர்ந்த வனப்பகுதிற்கு சென்றார்.


அங்கு வழியில், நாரத மகரிஷி இவரை ஆசிர்வதித்து த்வாதசாக்ஷரி மந்திரத்தை (ஓம் நமோ பகவதே வாஸுதேவாய) உபதேசித்தார். நாரதரிடம் உபதேசம் பெற்ற பிறகு த்ருவன் ஒற்றை காலில் நின்று கோர தவம் புரிகிறார். தனது பிரார்த்தனையின்போது, விழுந்த பச்சை இலைகளையும் தண்ணீரையும் சிறிது நேரம் சாப்பிட்டு, மேலும் சில காலம் வெறும் தண்ணீருடன் தவத்தை தொடர்ந்தார். ஸ்ரீமத் பாகவதத்தில் துருவ பக்தி மிக விஸ்தாரமாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் அவரது பிரார்த்தனை உணவு அல்லது தண்ணீரின்றி வெறும் சுவாசத்தால் தொடர்ந்தது.  அவர் இறைவனைக் காண முடியாதபோது, அவர் சுவாசிப்பதை நிறுத்திவிட்டு, மூச்சைப் பிடித்துக் கொண்டு இறைவனை ஜெபித்தார். இவரின் தவத்தின் ஜ்வாலை மூவுலகையும் தேவலோகத்தியும் தகித்தது. அப்பொழுது த்ருவனுக்கு வயது வெறும் 5 மட்டுமே. அனைவரும் சென்று ஸ்ரீமன் நாராயணனை சரண் அடைந்தனர். இதற்கு மேலும் சோதிக்க விரும்பாத ஸ்ரீமன் நாராயணன் லக்ஷ்மியிடம் கூட கூறாது உடனே த்ருவனின் இடம் சென்று தனது பாஞ்சஜன்யத்தால் அவனது கன்னத்தை தடவி ஞானத்தை வழங்கினார். ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய மங்கள ரூபத்தில் லயிக்கிறான் த்ருவன். இவனின் அபார பக்திக்கு ஸ்ரீமன் நாராயணன் 36000 ஆண்டுகள் துருவ மண்டலத்தில் ராஜாவாக நியமித்தார் (இது பிரம்மாவின் 100 ஆண்டிற்கு சமம்). துருவ மண்டலத்திற்கு ராஜாவாக இருந்து நவகிரஹங்களையும் காலச்சக்கரத்தியும் கட்டுப்படுத்துகிறான். இவனின் துருவ லோகம் ருஷி மண்டலத்திற்கு மேலே 13 லட்சம் யோஜனா தூரம் அமைந்துள்ளது. அங்கிருந்து சூரியன், சந்திரன் மற்றும் பிற கிரகங்களின் இயக்கத்தை அவர் கட்டுப்படுத்துகிறார்.

இது ஒரு உத்தியோக பூர்வ பதவி என்பதால் ஒவ்வொரு ஆத்மாவின் விரும்பிய குறிக்கோளான மோட்சத்தை அடைய தனக்கு உரிமை கிடையாது என்று துருவராஜா நினைத்தார். பிரபஞ்சத்தின் நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்நாளில் கடவுளின் பண்புகளை ஒழுக்கமான முறையில் அறிய அவர் விரும்பினார் அதன்படி, த்ருவராஜா பாரத தேசத்தில் ஸ்ரீ பாதராஜ தீர்த்தராக அவதாரம் புரிகிறார்.

பிறப்பு

இவர் கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர். லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும். சேஷகிரியாச்சார் மற்றும் கிரியம்மா தம்பதிகளின் மகனாக 1412 ஆம் ஆண்டு பிறந்து இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார்.

பீடாபதித்வம்
சிறு வயதில் நண்பர்களுடன் லஷ்மி நாராயணா விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கே வந்த ஸ்வர்ணவர்ண தீர்த்தர் (ஸ்ரீ பத்மநாப தீர்த்த சமஸ்தானத்தை சேர்ந்த எட்டாவது பீடாதிபதி; பத்மநாப தீர்த்தர் என்பவர் ஸ்ரீ மத்வரின் நேரடி சிஷ்யர் ) அப்பூருக்கு (புருஷோத்தம தீர்த்தரை பார்ப்பதற்காக) எப்படி போக வேண்டும் என்று லஷ்மி நாராயணாவிடம் கேட்கவே அதற்கு “சூரியன் மறைய தொடங்கிவிட்டது, நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம், இதனால் அப்பூர் எவ்வளவு தூரம் என்று நீங்கள் ஊகிக்கலாம்”, சிறுவன் சொன்ன பொருள் “நாங்கள் சூரியன் மறையும் போதும் விளையாடிக் கொண்டிருப்பதால் அப்பூர் அருகிலேயே உள்ளது” என்பதே.
சிறுவனின் புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்த ஸ்வர்ணவர்ண தீர்த்தர், அப்போதே இந்த சிறுவன் தான் தனக்கு பிறகு பட்டத்திற்கு வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார். ஸ்வர்ணவர்ண  தீர்த்தரின் தோற்றம் ப்ரம்ம தேஜசும், தங்க சாயலை கொண்டிருப்பார், அதனால் அப்பெயர் பெற்றார்.
ஸ்வர்ணவர்ண தீர்த்தர் தன் ஆசையை புருஷோத்தம தீர்த்தரிடம் கூறவே, அவரும் லஷ்மி நாராயணாவின் பெற்றோரை தான் சம்மதிக்க வைக்கிறேன் என்று கூறினார். ப்ரம்மண்ய தீர்த்தரும் (புருஷோத்தம தீர்த்தரின் சிஷ்யர்) லஷ்மி நாராயணாவும் உறவினர் என்பதால் சேஷகிரியும் கிரியம்மாவும் தன் மகனை துறவறத்திற்கு அனுமதித்தனர்.
ஸ்வர்ணவர்ண தீர்த்தர் லஷ்மி நாராயணாவிற்கு “லஷ்மி நாராயணா யோகி” என்று பட்டம் இட்டார். அப்போது அவருக்கு வயது பதினாறு.       தன் குருவான ஸ்வர்ணவர்ண தீர்த்தரிடம் வேதம், உபநிடதம், சாஸ்திரங்கள், மத்வ சித்தாங்கள் கற்றுக் கொண்டு சிறந்து விளங்கினார். திக்விஜயங்கள் மேற்கொண்டு இறைவனை கண்டுகொண்டும், த்வைத கொள்கைகளை பரப்பியும், பல வாதிகளை வென்றார்.
லஷ்மி நாராயணா யோகி எப்போது ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் ஆனார் என்று கேள்வி எழலாம். ஸ்வர்ணவர்ண தீர்த்தர் பிருந்தாவன பிரவேசத்திற்கு பிறகு, ஸ்ரீரங்கத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள முலுபாகலு என்ற இடத்தில் தன் வாழ்நாளை கழித்தார்.
அப்போது இருந்த குருவான ஸ்ரீ விபூதீந்திர தீர்த்தரிடம் லஷ்மி நாராயணா யோகி வித்யா கற்றுக் கொண்டார். விபூதீந்திர தீர்த்தர் லஷ்மி நாராயணா யோகியுடன் உத்திராதி மடத்தின் பீடாதிபதியான ரகுநந்தன தீர்த்தரை சந்தித்தனர்.
இந்த ரகுநந்தன தீர்த்தரே லஷ்மி நாராயணா யோகிக்கு ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் என்று பெயர் இட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒருமுறை லஷ்மி நாராயணா யோகி “ஸ்ரீ சுதா” க்ரந்தத்தை படித்துக்கொண்டிருந்த போது மிகவும் கடினமான சொற்களையும், பொருள்களையும் மிக எளிமையாக விளக்கியதால் ஆச்சரியத்தோடு பார்த்தார் ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர். அப்போது ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர்” நாங்கள் எல்லாம் வெறும் சன்யாசிகளே, நீயோ சன்யாசிகளுக்கே ராஜா (பாதராஜர்)”, அன்று முதல் லஷ்மி நாராயணா யோகி “ஸ்ரீ ஸ்ரீபாதராஜராக” மாறினார்.
மற்றொரு காரணமாக கருதப்படுவதை பார்ப்போம். லஷ்மி நாராயணா யோகி ஒரு இறந்த சிறுவனை உயிர்த்து எழவைக்கவே ரகுநந்தன தீர்த்தர் அதிசயத்தோடு பார்த்து “ஸ்ரீ ஸ்ரீ பாதராஜர்” என்று பெயர் இட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீ ஸ்ரீ பாதராஜரின் தனிச்சிறப்புகள்
v  அன்றைய காலகட்டத்தில் சுமார் 700 ஆண்டிற்கு முன்பே இவரிடம் 10,000 சிஷ்யர்கள் இருந்தனர். ஒரு பல்கலைக்கழகத்தையே நடத்தி வந்த மிகப்பெரும் மஹான் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ ஸ்வாமிகள். இவரின் சிஷ்யர்களில் ஸ்ரீ வ்யாசராஜ தீர்த்தர் மற்றும் ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் மிக மிக முக்யமானவர்கள் என்றால் இவரின் அபார கீர்த்தி நமக்கு நன்கு விளங்கும்.
v  ”தாஸ ஸாகியத்தின் பிதாமகர்”. இன்று செழித்து இருக்கும் தாஸ ஸாகித்யதிற்கும் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே கன்னட மொழி மூலம் பாட்டுகளை இயற்றி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
v விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னரான நரசிம்ம பூபாலன் ஸ்ரீ ஸ்ரீபாதராஜரிடம் தன்னுடைய அமைச்சரவையில் “ராஜகுருவாக” இருக்குமாறு கேட்டுக் கொள்ள, அதற்கு மறுப்பு தெரிவித்து, தன் சிஷ்யரான “வியாஸ தீர்த்தரை” அனுப்பினார். கிருஷ்ண தேவராயரின் அவையில் மன்னனை குஹயோகம் என்ற மரண யோகத்தில் இருந்து காப்பற்றி ஒரு நாள் ஆட்சி செய்ததால் வியாஸ தீர்த்தர் வியாஸ ராஜராக மாறினார்.
 v ஒருமுறை உடல் நலக்குறைவால் படுத்திருந்த ஸ்ரீ ஸ்ரீபாதராஜர், தன் சிஷ்யரான வியாஸராஜரை பூஜை செய்யுமாறு கூறினார். ஒரு பெட்டி மட்டும் பல வருடமாக திறக்க முடியாமல் இருந்தது. அன்று பூஜை செய்த வியாஸராஜர் திறக்கவே, பெட்டியில் இருந்த அழகான வேணுகோபால ஸ்வாமி விக்கிரகம் குழல் ஊதியபடி நடனமிட தொடங்கியது. வியாஸராஜர் தாளம் போட்டு பாடவே, படுத்திருந்த ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் எழுந்து வந்து கோபாலனின் நடனத்தை மெய்சிலிர்த்துப் பார்த்தார். நடனமாடிய வேணுகோபால ஸ்வாமி அதற்கு பின் விக்கிரஹமாக மாறியது. அந்த விக்கிரஹத்தை வியாஸராஜரிடம் பரிசாக கொடுத்தார் ஸ்ரீபாதராஜர். இன்றும் அந்த விக்கிரஹத்தை வியாஸராஜ மடத்தில் காணலாம்.
v  ஸ்ரீபாதராஜர் வியாஸராஜருக்கு பல அதிசயத்தை கற்றுக்கொடுத்துள்ளார். அதனால் தன் குருவை ”பக்த மந்திரா” என்று வியாஸராஜ அழைப்பார். ஸ்ரீபாதராஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை வியாஸராஜர் தன் சமஸ்கிருத நூலான ”பஞ்சரத்னமாலா துதி”யில் எழுதியுள்ளார்.
v  தன் வயதான காலத்தில் கங்கா நதிக்கு போகமுடிய வில்லையே என்ற வருதத்தில் இருந்தார் ஸ்ரீபாதராஜர். அவரின் கனவில் தோன்றிய கங்கா தேவி மறுநாள் நரஸிம்ம தீர்த்த குளத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளவே மறுநாள் மேகங்கள் சூழ கங்கா தேவியின் அருள் மழை பொழிந்தது. அந்த அளவிற்கு சக்தி படைத்தவர் ஸ்ரீ ஸ்ரீபாதராஜர். அந்த குளத்தில் குளித்தால் புன்னிய நதியான கங்கையில் குளித்ததற்கு சமமாக கருதப்படுகிறது. இப்போதும் கங்கா நீரை முலுபாகலில் காணலாம்.
 v  ஸ்ரீபாதராஜரின் புகழ் திசையெங்கும் பரவியது. இது பலரின் உள்ளங்களில் பொறாமையை விதைத்தது. ஒரு முறை... ஸ்ரீ பாதராஜர் காசிக்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட காசி நகரப் பண்டிதர்கள் பொறாமையுடன் ஸ்ரீபாதராஜரை வாதத்துக்கு அழைத்தார்கள். ஸ்ரீபாதராஜர் அதற்கு ஒப்புக் கொண்டார். ‘‘இந்த வாத-பிரதிவாதம் அரசரின் முன்னால் நடந்தால் நன்றாக இருக்கும்!’’ என்று தன் எண்ணத்தையும் வெளியிட்டார். பண்டிதர்கள் ஏற்க வில்லை. ‘‘அதற்கு அவசியம் இல்லை. நமக்குள்ளாகவே ஒரு நிபந்தனையின் பேரில் வாதம் செய்யலாம். அதாவது, வாதத்தில் நீங்கள் தோற்றுவிட்டால், எல்லோர் முன்னிலையிலும் கங்கையில் விழுந்து உயிரை விட வேண்டும். நீங்கள் ஜெயித்து நாங்கள் தோற்று விட்டால், நாங்கள் சந்நியாசிகளாகி விடுகிறோம்!’’ என்றார்கள். நிபந்தனை என்றால், இரு பக்கமும் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும்? அப்படியும் பண்டிதர்களின் இந்த நிபந்தனைக்கு ஸ்ரீபாதராஜர் ஒப்புக் கொண்டார். தகவல் அரசனையும் எட்டியது. வாதப் போர் தொடங்கியது. கடைசியில் காசி நகரப் பண்டிதர்கள் எல்லோரும் ஸ்ரீபாதராஜரிடம் தோற்றுப் போனார்கள். அந்தப் பண்டிதர்களின் உள்ளங்களில் பயம் இடம் பிடித்துக் கொண்டது. ‘வாதப் போர் பற்றிய நிபந்தனைகள் எல்லாம் அரசனுக்குத் தெரியும். வேறு வழியில்லை. சந்நியாசம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.  இல்லாவிட்டால், மன்னன் தண்டிப்பான்!’ என்ற எண்ணத்தில் அனைவரும் துறவு பூண்டார்கள். எனினும், அவர்களால் ஸ்ரீபாதராஜரின் மீதுள்ள கோபத்தைத் துறக்க முடியவில்லை. ‘இனி, ஸ்ரீபாதராஜர் எங்கும் வாதம் செய்யக் கூடாது’ என்று தீர்மானித்து, மந்திரத்தின் மூலம் ஸ்ரீபாதராஜரை வாக்பந்தனம் எனப்படும் வாய்க்கட்டு (வாயிலிருந்து வார்த்தைகள் வெளி வராதபடி) செய்து விட்டனர். நடந்ததை உணர்ந்த ஸ்ரீபாதராஜர் இந்த இன்னல் நீங்க ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபித்து அவரிடம் மனதார வேண்டினார்.  அதிசயம் நிகழ்ந்தது. அந்த இடத்தில் விக்கிரக வடிவமாக ஸ்ரீ ஹயக்ரீவர் எழுந்தருளி அங்கும் இங்குமாக நடை போட்டார். பின்பு ஸ்ரீபாதராஜரை வாக்பந்தனத்தில் இருந்து விடுவித்தார். இதனால் நெகிழ்ந்த ஸ்ரீபாதராஜர், ஹயக்ரீவரை ஓர் இடத்தில் நிலை நிறுத்தி, தோத்திரம் சொல்லித் துதித்தார்.  இந்த விக்கிரகம் இன்றும், ஸ்ரீபாதராஜ மடத்து பூஜையில் இருப்பதைக் காணலாம்.

v விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசனுக்கு” ப்ரஹ்மஹத்தி தோஷம்” இருக்கவே அதை நிவர்த்தி செய்ய தன் குருவிடம் வேண்டினார் மன்னர். குருவும் யாக பூஜைகள் செய்து தோஷத்தை தீர்க்கவே, மன்னர் குருவை அரியணையில் அமரவைத்து கனகாபிஷேகம் செய்து கெளரவித்தார். குருவின் எதிரிகளுக்கு இதனால் ஒரே பொறாமை. இந்த குரு, மன்னரை ஏமாற்றி விட்டார் எனவும், மன்னரின் தோஷம் நீங்கவில்லை என கதை கட்டினர். இதை அறிந்த குரு அவர்களை அழைத்து ஓர் வெள்ளைத்துணியை ஆளிவிதை எண்ணெய்யில் போடுமாறு கேட்டுக் கொண்டார். பின் எடுக்க சொல்லவே வெள்ளைத்துணி கருப்பாக இருந்தது. அந்த கருப்புத்துணியில் தான் ஜபித்த கமண்டல நீரை தெளித்தவுடன், துணி முழுவதும் வெள்ளையாக மாறியது. குருவின் எதிரிகள் அவரின் மஹிமையை ஆச்சரியத்தோடு பார்த்தனர். தங்களின் தவற்றை உணர்ந்த எதிரிகள் குருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
v  அந்த காலத்தில் “விஜயநகர சாம்ராஜ்யம்” பரந்து விரிந்து இருந்தது. முளுபாகல் என்ற ஊரும் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழே வந்தது. வியாஸராஜர் ”ஸ்ரீபாதராஜராஷ்டகம்” என்ற நூலில் சாளுவ நரஸிம்மனின் அரசவையில் ஸ்ரீ பாதராஜரின் செல்வாக்கை பற்றி எழுதியுள்ளார்.
பாண்டித்யம்
ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பிரம்மகீதா, வேணுகீதா, கோபிகீதா, மத்வ நாமா புகழ் பெற்றது. மத்வ நாமாவிற்கு பலச்ருதி அவர் எழுதாமல், சுமார் இருநூற்றி ஐம்பது வருடங்களுக்கு பின் வாழ்ந்த ஸ்ரீ ஜகன்னாத்தாஸரால் இயற்றப்பட்டது. அவர் பல பாட்டுகளையும் எழுதியுள்ளார், “கண்கள் யாதகோ காவேரி ரங்கன நோடத”, “பூஷணக்கே பூஷண இது பூஷண” போன்ற பாடலை பாடினார். அவர் தன் வாழ்நாளில் நாற்பது முறை மத்வர் அருளிய “சர்வ மூல க்ரந்தங்களை” வியாக்கியானத்தோடு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இவர் “ரங்க விட்டல” என்ற முத்ரிகையில் பல கன்னட பாடல்களை இயற்றியுள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ பாதராஜரின் மூல பிருந்தாவனம்
ஸ்ரீ ஸ்ரீ பாதராஜர் தனது சீடர்களில் ஒருவரை தனது அடுத்த வாரிசாக தேர்ந்தெடுத்து அவருக்கு ஸ்ரீ ஹயக்ரீவ தீர்த்தர் என்று பெயரிட்டார். அவர்  ஜேஷ்ட ஸுதா சதுர்த்தசியில் பிருந்தாவன பிரவேசம் செய்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது இவ்விடம் நரசிம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.


Sri Sripadaraja Mutt (Mulbagal Mutt)
Sri Narasimha Theertha, Mulbagal - 563 131, Karnataka, India
Contact:- Sri. H B Jayaraj
Ph: (08159) 290839, 9242613866 (Resi) (08159) 542686
ஸ்ரீ ஸ்ரீபாதராஜரின் மங்களாசரண சுலோகம்
நமோ ஸ்ரீபாதராஜயே நமஸ்தே வியாஸ யோகினே
நம புரந்தரயாய விஜயார்யதே நமஹ !!

"ஹரி ஸர்வோத்தமா வாயு ஜீவோத்தமா"





 

 


13 comments:

  1. Very nice and devine information.
    People who visited nava Brindavan in Karnataka may be able to relate their experinces to such Brindavan and appreciate such Guru Grace. Jai sairam

    ReplyDelete
  2. Bhargavi

    Well narrated it was very interesting feel like reading it again and again congrats for the good work keep posting ....

    ReplyDelete
  3. Good spiritual story . Please doing this kind of spiritual devine need to share to others in regularly. Good work .

    ReplyDelete
  4. Excellent This is the first time I know about Sri Sri PadhaRajaDheerthar அருமை அருமை இது போன்ற மாகாணங்களின் வரலாறு இதுவரை யாரும் தரவில்லை உங்களின் இந்த அரிய முயற்சி தொடரவாழ்த்துகள்

    ReplyDelete
  5. மிகவும் அருமை. தங்களின் இதுபோன்ற அரிய தகவல் பொக்கிஷங்களை பதிவிடுவதனை படிப்பது மூலம் மனதிற்கு இதமாக உள்ளது.

    ReplyDelete
  6. தாமதமாக Commentஅனுப்பியதற்கு முதலில் மன்னிக்கவும். தாங்களின் இந்த சேவை மிகவும் புண்ணிய புனித செயல். இந்துவாக இருந்து அறிந்து கொள்ளாத விஷயங்கள் எவ்வளவு உள்ளன. தாங்ஙகள் தரும் ஆன்மீக விஷயங்களை படிக்கும் பொழுது ஆசிரியமாகவும் மனதுக்கு இதமாகவும் உள்ளது. இதை என் ஆன்மீக நண்பகளுக்கும் பதிவு செய்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். சீரிய பணி தொடர இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  7. Very good effort to present rare information about the great seer. Thanks.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஆன்மிக பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது.

    உங்களின் பதிவ மீண்டும் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Guru Maha Yathikalu Sri Sri Padharaja Theerthar Life History very nicely narrated. You can continue to post more Guru Maha Purushas's stories to cleanse our birth. Reading their biographies itself will remove all our sins once for all. Really good spiritual journey you have stated. God Bless You!
    Suggestion: you can give clear travel information to reach such punya kshetra to have darshan of Guru Mahasannidanam.

    ReplyDelete
  11. Hello sir, is there a way i can get the full resolution image of the rare sringeri picture you have posted with vishnu and lakshmi seated on garudar? if you can respond to me, i can share my email address offline so that you can share original picture image you have. I would like to print this image, and having the full size will ensure printout comes well.

    ReplyDelete