எனது பதிவுகள் தொடர்ந்து ஆன்மிகமலர் e-magazine வெளியிடப்படுகிறது.
![]() |
My Article Published at Page 36-37 |
![]() |
My Article Published at Page No 13, 34-36 |
1) நமது பாரத புண்ணிய பூமியில் எண்ணற்ற ஆச்சர்யமூட்டும் அதிசயத்தக்க நிகழ்வுகள்
பொதிந்து உள்ளன. அப்படி ஒரு கதாபாத்திரம் கார்த்தவீர்யார்ஜுனன்.
2) க்ருத யுகத்தில்
உலகம் நன்முறையில் இயங்க மகாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாகப்
பிறந்தவன். தத்தாத்ரேயர் உபதேசம் செய்த ‘சப்தமி ஸ்நபனம்’ என்னும் விரதத்தை அனுஷ்டித்து
பிறந்தவன். இவன் ஒரு சிறந்த கணபதி உபாசகன் ஆவான். ஸ்ரீ விக்னேஸ்வர பெருமானின் ப்ரத்யக்ஷ தரிசனம் பெற்றவன்.
3) ஹைஹய வம்சத்தின் மாபெரும் சக்கரவர்த்தி கிருதவீர்யன் மகன். வேத
சகாப்தத்தின் மிக நீண்ட ஆளும் சக்கரவர்த்தி சாம்ராட் ஆவார். மகிஷ்மதி நகரத்தை கைப்பற்றி அதை தனது கோட்டை தலைநகராக மாற்றி பெரும் அரசாட்சி
புரிந்தான். மகாபாரதம் அவரை ஒரு சிறந்த போர்வீரன் என்று குறிப்பிடுகிறது. தியாகங்கள், தொண்டு,
கற்றல், சிக்கனம், போர்க்கள
சாதனைகள், வலிமை, கருணை, தாராள மனப்பான்மை அல்லது சக்தி ஆகியவற்றில் அவருக்கு போட்டியாக யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
4) கார்த்தவீர்யனின் குரு ஸ்ரீ தத்தாத்ரேயர். கார்த்தவீர்யார்ஜுனன்
பகவான் ஸ்ரீ விஷ்ணு தத்தாத்ரேயராக அவதாரம் எடுத்த போது, அவரது தரிசனத்தைப் பெற்றவன். அவரிடம் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் திருக்கையாலேயே
மரணமடைய வேண்டும் என்ற வரத்தை கேட்டு வாங்கிய மாபெரும் விஷ்ணு பக்தன். குரு தத்தாத்ரேயரிடம்
அவன் பணிவுடன் வேத சாஸ்திரங்களைக் கற்று வந்தான். அவனின் குரு பக்தியில் நெகிழ்ந்த
ஸ்ரீ தத்தாத்ரேயர், ஆயிரம் கைகளின் பலத்தை அருளினார்.
உன்னை வெல்லுவது எவனுக்கும் இயலாது என்று வரம் அளித்தார்.
அவரிடம் நான்கு அற்புதமான வரங்களை பெற்றார்.
·
விரும்பிய போதெல்லாம்
ஆயிரம் கைகள் வரும் வரம்.
·
இவரது ராஜ்யத்தில் யாராவது
அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.
·
எல்லா உலகங்களையும்
வென்று அரசாளும் வரம்.
·
இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை
விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.
5) இலங்கை வேந்தனையாகிய தசமுக ராவணனையே போரில் வென்ற அளவற்ற பராக்கிரமசாலி,
தீரன், அசகாய சூரன். கார்த்தவீர்யார்ஜுனன் ராவணனை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் அவனை
ஒரு கயிறால் கட்டி, தனது நகரத்தில் இருப்பவர்களுக்கு ‘‘இதோ பாருங்கள் பத்துத் தலைப்
பூச்சியை’’ என்று வேடிக்கை காண்பித்தான். பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு
இணங்கி அவனை விடுதலை செய்தார்.
6) கார்த்தவீர்யார்ஜுனன் ஒரு முறை வேட்டையாடிவிட்டு, பரசுராமரின் தந்தையான ஜமதக்னியின்
ஆசிரமத்திற்கு வந்தான். அவனுக்கும் அவனது படையினருக்கும் ஜமதக்னி முனிவர் தன்னிடமிருந்த
காமதேனுவின் துணைக் கொண்டு அமோகமாக விருந்து படைத்தார். அதைக் கண்ட கார்த்தவீர்யார்ஜுனன்,
தனக்கு அந்த காமதேனு வேண்டுமென்றான். காமதேனு முனிவர்களின் தனிச்சொத்து என்றார் முனிவர்.
பிறகென்ன பெரிய யுத்தமே வந்தது. காமதேனுவினிடமிருந்து ஆயிரமாயிரமாக வீரர்கள் தோன்றினார்கள்.
கார்த்தவீர்யார்ஜுனன் சேனை அனைத்தும் நிர்மூலமானது. கோபமடைந்த கார்த்தவீர்யார்ஜுனன்
ஜமதக்னியைக் கொன்றுவிட்டு, காமதேனுவின் கன்றைக் கவர்ந்து சென்றுவிட்டான்.
தன் தந்தையின் இந்நிலைக்கு காரணம், கார்த்தவீர்யார்ஜுனன் தான் என்று உணர்ந்த
பரசுராமர் அவனை எதிர்த்துப் போருக்குச் சென்றார்.
அவனுடைய படை அனைத்தையும் த்வம்சம் செய்தார் பரசுராமர். இதனால் கோபம் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன்,
போர்க்களத்திற்கு வந்து பரசுராமரைக் கண்டபடி தாக்கினான்.
அவன் செலுத்திய பாணங்கள், பரசுராமரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக பரசுராமர் விட்ட
பாணங்கள் அனைத்தும், அவனது ஆயிரம் மலைப் போன்ற கரங்களையும் பூவைக் கொய்வது போல வெட்டி
வீழ்த்தியது. அப்போது தான் அவன் தன் முன்னால் நிற்பது, சாட்சாத் பரம்பொருளே என்பதை
உணர்ந்தான்.
பின்பு ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், பரசுராமரின் பாதத்தில் கார்த்தவீர்யார்ஜுனன்
சரணாகதி அடைந்தான். அவனின் விருப்பப்படி ஸ்ரீமன் நாராயணன் அவதாரமாகிய பார்கவ ராமன்
என்னும் பரசுராமரிடம் மடிந்தான் அதன் விளைவாக பரசுராமர் 21 க்ஷத்ரிய வம்சத்தை அழித்து
தனது பகையை தீர்த்து கொண்டார். இறுதியாக ரகுகுல திலகன் ஸ்ரீ ராமனிடம் சரண் அடைந்தார்.
7) தமிழ்நாட்டில் இவரை ஒரே
ஒரு ஆலயத்தில் மட்டுமே பார்க்கலாம். கும்பகோணம் மாவட்டம் குடவாசலில் இருந்து
4 கி.மீ தூரத்தில் சேங்காலிபுரம் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள ஆலயத்தில்
இவரது விக்ரகம் உள்ளது. அங்கு சென்று இவருக்கு பூஜை செய்து மந்திரம் ஜெபித்து
வேண்டிக்கொள்வது சிறப்பான பலனைத் தரும். வாலாஜாபேட்டையிலும் உள்ளது
இவருக்கான சன்னிதி உள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள பாண்டுரங்கஸ்வாமி கோவிலில் கார்த்தவீர்யார்ஜுனர்
சன்னிதி உள்ளது.
8) கார்த்தவீர்யார்ஜுனன் ஹோமம் செய்யப்படுவதின்
பிரதான நோக்கமே இழந்த நமது பூர்வீக சொத்துக்களையும், பொருட்களையும் திரும்ப மீட்பதற்காக
தான். வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து
பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட
பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும். இழந்த பொருட்கள், சொத்துக்கள்
போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க
வழிவகை செய்கிறது. அதேபோன்று சில குடும்பங்களில் சில நபர்கள் மிக இளம் வயதிலோ அல்லது
பல்வேறு காரணங்களால் காணாமல் போவது, பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களை
மீண்டும் தொலைந்த தங்களின் உறவுகளோடு சேர்க்க செய்யும் ஆற்றல் மிக்க ஹோம பூஜையாக கார்த்தவீர்யார்ஜுன
ஹோமம் இருக்கிறது.
ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜூனாய நம
கார்த்த வீர்யார்ஜூனோ நமஹ
ராஜா பாஹு சஹஸ்ரவாந்
தஸ்ய ஸமரந மாத்ரேனா
கதம் நஷ்டம் ச லப்யதே
கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து
ஜெபிக்க வேண்டும்.
ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்
ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹாசூஷ்மாய தீமஹி
தந்நோஸ்ர்ஜுநஹ்
ப்ரசோதயாத்
அடுத்த பதிவு "ஸ்ரீ ஸ்ரீ வாதிராஜ தீர்த்தரின் புண்ணிய சரிதம்" அனைவரும் படித்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.