Tuesday, April 20, 2021

ஸ்ரீ ராமநவமி (21-04-2021)

இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றிய கட்வாங்கனுடைய குமாரன் தீர்க்கபாஹு அவனின் புத்திரன் ரகு - ரகுவின் புத்திரன் - அஜன் அவனின் புத்திரன் தசரதர் - தசரதர் புத்திரர் ஸ்ரீராமர்.

சித்திரை மாதம் சுக்லபக்ஷம் புனர்பூச நட்சத்திரத்தில் நவமி திதியில் தான் ஸ்ரீராமரின் திருஅவதாரம் நிகழ்ந்தது. அவர் பிறப்பின்பொழுது 5 கிரஹங்கள் மிகவும் உச்சத்தில் இருந்தது. இது ஓர் அபூர்வ நிகழ்வாகும். அநேக சுப சகுனங்கள் தோன்றின மற்றும் வானவர்கள் பூமாரி பொழிந்தனர். ஏனென்றால் தசரதர்-கௌசல்யா புத்திரனாக அவதரித்தது ஸாக்ஷத் ஸ்ரீமன் நாராயணர் அன்றோ!!

ஸ்ரீராமர் ஜனித்தவுடன் அயோத்யா மாநகரமே திருவிழா பூண்டது. முதலில் முழு முதற் கடவுளான ஸ்ரீவிக்னேஸ்வரருக்கு பூஜை செய்யப்பட்டது. அனைவருக்கும் தானங்கள் வழங்கப்பட்டன. சூர்யவம்ச குலகுரு வசிஷ்டர் வேதமந்திரங்களை ஓதி  மானசீகமாக அபிஷேகம் செய்தார். தேவர்கள் அனைவரும் சூக்ஷமரூபம் தரித்து ஸ்ரீராமரை கண்ணார தரிசித்தனர். ஸ்ரீராமர் சூர்ய வம்சம். ராமன் என்பதற்கு 'ஆனந்தம் அளிப்பவர்' ‘ஆனந்தமாய் இருப்பவர்' என்று அர்த்தம். ஸ்ரீராமர் வேத வித்து. தர்மம் ஸ்வரூபி. வேதம் ஸ்ரீமத் ராமாயணமாக வால்மீகி முனிவரால் பிறந்தவுடன் அந்த வேதத்தின் பொருள் ஸ்ரீராமராக அவதரித்தது. வெளியுலக பார்வைக்கு மனிதனாக பிறந்து துக்கிப்பதாக தெரிந்தாலும் உள்ளுக்குள் பரம ஆனந்தத்தை அனுபவித்த ஒரே அவதாரம் ஸ்ரீ ராமாவதாரமாகும்.

ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீராமரை 'மர்யாதா புருஷோத்தமன்' என்று புகழ்கிறது. ஸ்ரீமன் நாராயணர் எடுத்த அவதாரங்களில் மிக நீண்ட நெடிய அவதாரம் ஸ்ரீ ராம க்ருஷ்ண அவதாரங்கள் மட்டும்தான். நாடெங்கும் சுபிக்ஷம், ஜனங்கள் மனக்கவலை, துக்கம், வறுமை, பிணி, மூப்பு, பசி, தாகம் இன்றி சகல ஐஸ்வர்யங்களுடன் விளங்கினார். ஏகபத்தினி விரதராக ராஜரிஷியைப்போல் தர்மகளை அனுஷ்டித்து 13000 வருடங்கள் (11000 வருடங்கள் என்றும் கூறுவர்) அரசாட்சி புரிந்து சனாதன தர்மத்தை நிலைநாட்டினார். இவரின் ராஜ்ஜியம் 'ஸ்ரீராமராஜ்ஜியம்' என்று அழியாப்புகழ் பெற்றது.

வசிஷ்டர் ராமனை தரிசனம் செய்தபிறகு தான் சகலத்தையும் தன் பெயர் உட்பட மறந்துவிட்டதென கூறுகிறார்.

'தத்ர வேதா அவேதா பவந்தி' - ஈஸ்வர தரிசனம் உண்டான பிறகு வேதம் கூட மறந்து விடுகிறது. பகவத் சாஷாத்காரத்திற்கு பிறகு வேதத்தின் அவசியம்தான் எது?

ஸ்ரீராமரின் முக்கிய அவதார நோக்கமே மனிதர்களுக்கு மிக உயர்ந்த ஆதரிசத்தை உணர்த்துவதற்கேயன்றி ராவண சம்ஹாரத்திற்காக மட்டும் அல்ல. மனிதன் எந்த தேவதையிடத்திலும் பக்தி பிரேமை வைக்கட்டும் ஆனால் அவனின் நடத்தை அவசியம் ஸ்ரீராமனைபோல்தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு முக்கிய நிகழ்வு ஸ்ரீராம நாமத்தின் பெருமையை விளக்க வருகிறது. ஒருசமயம் தேவர்கள், ரிஷிகள் மற்றும் மனிதர்கள் அனைவரும் சிவனிடம் ஸ்ரீமத் ராமாயணத்தை கேட்க வந்தனர். சிவபெருமான் ஸ்ரீராமரின் பரம பக்தர். அதன் காரணமாக ஸ்ரீ ராமானுபவத்தை தான் நேரடியாக அனுபவிக்கத்தான் ஸ்ரீஹனுமந்தனாக அவதாரம் எடுத்து ஸ்ரீராம சேவை செய்தார். மூல ராமாயணத்தில் ஒரு கோடி ஸ்லோகங்கள் உள்ளன. அதை தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள் மூவர்க்கும் சமமாக பங்கிட்ட பொழுது 32 அக்ஷ்ரங்கள் கொண்ட ஒரு ஸ்லோகம் மீதமிருந்தது. மீதமுள்ள அந்த ஒரு ஸ்லோகத்தை மூவர்க்கும் சமமாக பங்கிட்ட பொழுது எஞ்சிய இரண்டு எழுத்துக்களை ஸ்ரீசிவபெருமான் அதை தனக்கென்று வைத்துக்கொண்டார். அந்த இரண்டு எழுத்துதான் 'ராம' என்பது.  சதா சர்வ காலமும் கைலாயத்தில் ஸ்ரீராம தியானத்திலேயே ரமிக்கிறார் ஈஸ்வரனாகிய பரம்பொருள். ஸ்ரீராம ஜபத்தால் எல்லா கஷ்டங்களும் நீங்கி மங்களங்கள் உருவாகின்றது. சிவபெருமான் ராமாயணத்தின் ஆச்சார்யனாவார். ஹாலஹால விஷம் கூட ஸ்ரீராம நாமத்தினால்தான் தன்னை காப்பாற்றியதாக கூறுகிறார்.

ஸ்ரீராம நாமம் ஓர் தாரக மந்திரமாகும். பொதுவாக நாம் கூறும் அனைத்து மந்திரங்களுக்கும் அதிர்வலைகள் உண்டு. குறிப்பாக ராம நாமத்திற்கு அதிர்வலை அதிகம் ஏனென்றால் அஷ்டாக்ஷரமும் பஞ்சாக்ஷரமும் இணைந்த மந்திரம்தான் ராம நாமம். குறிப்பாக மந்திரங்களை குரு மூலமாக பெறப்பட்டால்தான் அது சித்திக்கும் என்பர். ஆனால் ராம நாமத்தை எப்பொழுது வேண்டுமானாலும் குரு உபதேசமின்றி ஜபிக்கலாம். ராம நாமமே பரப்ரஹ்மம் மற்றும் தாரக மந்திரம் என்பதால் அதற்கு மட்டும் விதி விலக்கு உண்டு.

எத்துனையோ மஹநீயர்கள் ஸ்ரீராம நாமத்தால் மேன்மை அடைந்து அதை ஜெபிப்பதன் அவசியத்தையும் உரைத்தனர். பின்வரும் மஹநீயர்களால்தான் ஸ்ரீ ராம நாம ஜபம் கலியுகத்தில் விரைவாக பரவியது.

v  ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மந்த்ராலயத்திற்கு அருகிலுள்ள பஞ்சமுகி என்னும் க்ஷேத்ரத்தில் 12 வருடங்கள் பலகோடி முறை ஸ்ரீராம நாமம் ஜெபித்தபடியால்தான் ஸ்ரீபஞ்சமுக ஹனுமானின் ப்ரத்யக்ஷ தரிசனம் கிடைத்தது.

v  ஸ்ரீ த்யாகப்ரஹ்மம் (நித்யம் 1,25,000 வீதம் தன்னுடைய வாழ்நாளில் 96 கோடிமுறை ராமநாமம் ஜெபித்தவர்)

v  ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் த்ரயோதசாக்ஷரி’யான ‘ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ என்ற மஹா மந்த்ரத்தை (பதிமூன்று கோடி ஜபித்து ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றவர்)

v  ஸ்ரீ நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (அனுதினமும் 1,08,000 ராம நாமஜபம் செய்வார்)

v  ஸ்ரீபத்ராசல  ராமதாசர், ஸ்ரீசமர்த்த ராமதாசர், ஸ்ரீதுளசிதாஸர்,ஸ்ரீவ்யாசராஜ தீர்த்தர் (இவர் 732 ஆஞ்சநேய விக் ரஹங்களை பிரதிஷ்டை செய்தவர்)  மற்றும் பல எண்ணற்ற மஹான்கள் ஸ்ரீராம பக்தியில் திளைத்து பூவுலகில் சனாதன தர்மத்தை பரப்பினர்.


 ஸ்ரீராம நவமி பூஜை செய்யும் முறை

ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து (குறிப்பாக பட்டாபிஷேக ராமர் படம் மிகவும் உத்தமம்), அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

ராமகாதையின் ஒவ்வொரு அக்ஷரமும் மாபாதகங்களை அழிக்கும் வல்லமை கொண்டது.

"சரிதம் ரகுநாதஸ்ய ஸதகோடிப்ரவிஸ்தரம்

ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதகநாஸனம்"

ஸ்ரீராமநவமியன்று ஸ்ரீமத் ராமாயண பாராயணம் மகா புண்ணியம். ஸ்ரீ ராமநவமி வருவதற்கு 2 வாரங்கள் முன்பிருந்தே ஸ்ரீமத் ராமதான பாராயணம் ஆரம்பித்து ராமநவமியன்று ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேகத்துடன் முடிப்பது உத்தமம்.

வால்மீகி வடித்த ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒவ்வொரு காண்டங்களும் ஸ்ரீ ராமரின் ஒவ்வொரு அங்கங்களாகும் என்று ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கின்றது.

பாலகாண்டம் - ஸ்ரீராமரின் திருவடி

அயோத்யா காண்டம் - ஸ்ரீராமரின் தொடை

ஆரண்ய காண்டம் - ஸ்ரீராமரின் உதரம்

கிஷ்கிந்தா காண்டம் - ஸ்ரீராமரின் ஹ்ருதயம்

சுந்தர காண்டம் - ஸ்ரீராமரின் கண்டம்

லங்கா/யுத்த காண்டம் ஸ்ரீராமரின் முகம்

உத்தர காண்டம் - ஸ்ரீராமரின் சிரசு

 

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !!!

 

"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"