Saturday, November 28, 2020

ஸ்ரீ மானிக் பிரபு மஹராஜ் மஹாசமாதி தினம் - 29-11-2020

  

ஸ்ரீவத்ஸ கோத்ரம் தேசஸ்த ரிக்வேதி ப்ராஹ்மண தம்பதியரான ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடே, ஸ்ரீ பய தேவி, தொடர்ந்து 16 வருடங்கள் குரு சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக, குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்கு மகனாக பிறப்பதாக உறுதியளித்து, மகாராஷ்டிர மாநிலம், கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில் டிசம்பர் 22, 1817 அன்று (மார்கஷீர்ஷா பூர்ணிமா - தத்த ஜெயந்தி, ஷாகா 1739 ஈஸ்வர நாம சம்வஸ்தரா) ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த உடன் அநேக சுப சகுனங்கள் தோன்றின.

இவர் தத்தாத்ரேயரின் நான்காவது திரு அவதாரமாக கருதப்படுகிறார்.

இவரின் பிறந்த ஊரான லத்வந்தியில் உள்ள ஸ்ரீ மானிக் பிரபுவின் அழகிய குழந்தை ரூபம்

மானிக் பிரபுவின் முஸ்லீம் பக்தர்கள் அவரை மெஹபூப் சுபானியின் அவதாரமாக மதித்தனர். அதே நேரத்தில் அவரது லிங்காயத் பக்தர்கள் அவரை பசவண்ணாவின் ஒரு வடிவமாக பார்த்தார்கள்.

இவருக்கு தாதாசாகேப் என்று ஒரு மூத்த சகோதரரும், தத்யா சாஹேப் என்று அழைக்கப்படும் ஒரு தம்பியும், சிமனாபாய் என்ற சகோதரியும் இருந்தனர்.


தத்தரின் அவதாரமாக பிறந்த இந்த குழந்தைக்கு ஓர் அபூர்வ சக்தி இருந்தது. இக்குழந்தைக்கு எதிரில் நின்று யாராகினும் தனது பிரச்சனைகளை கூறினால் அதற்கு உடனடி நிவாரணம் பெற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நிம்மதி பெற்றனர்.

இவருக்கு ஏழு வயதில் பெற்றோர் உபநயனம் செய்வித்தனர். இவர் செய்வீக குழந்தை அல்லவா ஆதலால் இவர் அனைத்து மந்திரங்களையும் ஓதி பண்டிதர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

படிப்பில் சிறிதும் நாட்டமின்றி இவர் திரிந்ததை அறிந்த பெற்றோர் தனது மகனை தாய் மாமா இல்லத்திற்கு அழைத்து சென்று ஓர் உத்தியோகத்தில் சேர்க்கும் படி கூற, அவரும் சேர்த்து விட, அந்த வேலையிலும் நாட்டம் இன்றி சிறிது மனக்கசப்போடு தாய் மாமா வீட்டில் இருந்து வெளியேறினார்.

இவர் புரிந்த லீலா வினோதம் சற்று வித்தியாசமானது. ஓர் பக்தனுக்கு புலியின் உருவில் காட்சி அளித்து அந்த க்ஷணம் முதல் அனைவராலும் 'மானிக் ப்ரபு' என்று அழைக்கப்பட்டார். ஹனுமான் ஆலய பூஜாரிக்கு தத்தரின் வடிவில் காட்சி அளித்தது கல்யாண் நகரில் காட்டு தீ போன்று பரவி இவர் தத்தரின் அவதாரம் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்து இவரிடம் ஆசி பெற வந்தனர்.

காசி, பண்டரிபுரம், பரளி வைத்தியநாதர், பீதார் மற்றும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று மக்களிடம் இறை நம்பிக்கையை வளர்த்தார்.

தனது பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் நீக்கினார். அனைத்து சமூகங்களும் அவரை மதித்ததால் அவருக்கு 'சகலமாதாச்சார்யா' என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஷீர்டி சாய் பாபாவை போன்று ஹிந்து-முஸ்லீம் பக்கதர்களிடையே ஓர் பாலமாக விளங்கினார்.

 

அற்புதங்கள்

 

v  இறந்த சிறுவனை தனது சக்தியால் உயிர்ப்பித்தார்.

v  கர்ப்பிணி பசுவை அடித்த முரடனுக்கு அந்த பசுவின் மூலம் தக்க பாடம் அளித்து திருத்தினார்.

v  விட்டல் பாபாவான பண்டரிநாதனை தொட்டு வணங்க முற்பட்டபொழுது பூஜாரி அவரை தடுக்க உடனே பண்டரிநாதனின் கழுத்தில் உள்ள மாலை மானிக் பிரபு கழுத்தில் விழுந்து ஸ்ரீ விட்டலனாகவே காட்சி அளித்தார்.

v  பக்தர்களுடன் பயணம் செய்கையில் கொடிய விஷ நாகம் தென்பட அதன் பாஷையில் பேசி அதனை போக வைத்தார்.

v  மக்களிடையே இறை நம்பிக்கையையும், மத ஒற்றுமையையும் வளர்க்க அயராது பாடுபட்டு அதில் அபார வெற்றியும் பெற்றார். இவரின் காலத்தில் ஸ்ரீ தத்தாத்திரேய வழிபாடு மிகவும் பிரபல்யமானது.

மராத்தி, கன்னடம், இந்தி, உருது மற்றும் சமஸ்கிருதம் போன்ற பல்வேறு மொழிகளில் ஏராளமான பஜன்கள் மற்றும் பதங்களை ஸ்ரீ பிரபு இயற்றினார்.

 

 முக்தி

ஹூம்னமாபாத் என்னும் மானிக் நகர் சென்று ஆஸ்ரமம் அமைத்து 1865 ஆம் ஆண்டு (29-11-1865) குழிக்குள் அமர்ந்து கொண்டு ஜீவ சமாதி அடைந்தார். இவரின் ஆத்மா இவரின் மூல ரூபமான ஸ்ரீ தத்தரிடம் சென்று கலந்தது.

ஹுமனாபாத் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும், பிதாரில் இருந்து 51 கி.மீ தூரத்திலும் ஸ்ரீ மானிக் பிரபு கோயில் அமைந்துள்ளது.