சாதுர்மாஸ்யத்தின் கடைசி மாதம் ‘கார்த்திக் மாதம்’ எனப்படும். மாதங்களில் மார்கழியாக ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதுபோல் ஸ்ரீமதி ராதாராணி மாதங்களில் 'கார்த்திக் மாதமாக' இருப்பதால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரீதியான மாதமும் கூட.
பகவான் நாராயணரின் பன்னிரு திவ்ய நாமங்களில் 12-ஆவது திருநாமமாக வருவது 'தாமோதரா'. (தாம - கயிறு, உதர - வயிறு). மிகவும் பவித்ரமான திருநாமம் இது.
யசோதா மாதா ஸ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் மற்றும் ஸ்ரீமதி ராதாராணியின் மாதமாக கருதப்படுவதால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மனதுக்கு இனிய விரதமாக கொண்டாடப்படுகிறது.
பத்ம புராணமும், ஸ்கந்த புராணமும் இதன் மஹிமை மற்றும் மகத்துவத்தை மிகவும் விஸ்தாரமாக
கூறுகிறது. நமது அனைத்து பாவங்களும் விலகும் ஓர் உன்னத விரதமாக கருதப்படுகிறது.
கண்ணன் என்றதும் அவனின் பால்ய லீலைகளும் விஷமத்தன்மையும் தான் சட்டென்று நினைவிற்கு வரும். கண்ணன் பால்ய லீலைகளில் மிகவும் முக்கியமானது வெண்ணை திருடும் படலம். வெளிப்பார்வைக்கு சாதரணமாக தெரிந்தாலும் இதில் மிகப்பெரிய தத்வம் பொதிந்துள்ளது. அகிலத்தையே ரட்சிக்கும் ஸ்ரீ வத்சனான ஸ்ரீமன் நாராயணனருக்கு கேவலம் வெண்ணை என்பது பெரிய விஷயம் அன்று. ஏன்னென்றால் அவரிடம் சகல ஐஸ்வர்யத்திற்கு அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மி இருக்கும் பொழுது வெண்ணையின் தேவைதான் என்ன? ஏன் அனைத்து கோபியர்கள் இல்லத்தில் வெண்ணை திருடினார்? அனைத்து கோகுல வாசிகளையும் தன்னுடைய க்ருபாகடாக்ஷத்தினால் ரக்ஷிக்கத்தான் ஒவ்வொரு இல்லங்களிலும் வெண்ணை திருடினார். யாருடைய வீட்டிலெல்லாம் வெண்ணை திருடினாரோ அவர்களளெல்லோரும் பூர்வ ஜெனமத்தின் புண்ணிய பலனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதை அறியாத கோபியர்கள், தாய் யசோதா மாதவிடம் தங்கள் இல்லங்களில் வெண்ணையை தங்கள் குமாரன் கண்ணன் திருடுவதாக புகார் அளித்தனர். இதனால் மிகுந்த தர்மசங்கடம் அடைந்த யசோதா மாதா, கண்ணனை அழைத்து அவனின் சேஷ்ட்டைகள் நாளுக்கு நாள் அதிதிகமாவதை கண்டு மனம் பொறுக்காமல், அவனை கயிற்றினால் கட்ட முற்பட்டபொழுது கயிறு வெறும் இரண்டு அங்குலம் தான் இருந்தது. மேற்கொண்டு பல கயிறுகளை கொண்டு வந்து முடித்து போட்டு கட்ட அதுவும் பற்றாமல் போக யசோதா சோர்ந்து போனாள். அகிலத்தையே தன்னுடைய சிறு ரோம காலின் நுனியில் அடக்கியாள்பவரை கேவலம் இரண்டு அங்குல கயிறு கட்டுப்படுத்துமா என்ன? இருந்தாலும் தாயின் சோர்வு நிலை கண்டு தானே மனமுவந்து தாயின் கயிற்றினால் கட்டுப்பாட்டார் (அ) கட்டுப்படுவது போல் நடித்தார்.
'கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்'
(மதுரகவி ஆழ்வார்)
யசோதா மாதா கயிறை உரலினில் இணைத்து அவன் எங்கும் அசையமுடியாதபடி கட்டினாள். என்னே அதிசயம் அகல கோடி ப்ரஹ்மாண்டகளையும் தாங்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணு தாயின் அன்பு பிடியில் தன்னை கட்டுப்படுத்தினார் என்பதே நிதர்சன உண்மை. ஸ்ரீ மாய கண்ணன் இருப்பு கொள்ளாமல் உரலை இழுத்து கொண்டு இரு மரங்களுக்கு இடயில்சென்று 'நாரத' முனிவரின் சாபத்தினால் ‘மருத மரமாக’ இருந்த 'குபேரனின் புதல்வர்களாக இருந்த 'நள'கூபரர்' மற்றும் 'மணிக்ரீவன்' என்னும் யக்ஷர்களின் சாபநிவர்த்தி செய்து அவர்களை ஆட்கொண்டார் என்ற மற்றொரு உண்மையும் இதில் பொதிந்துள்ளது. மரங்கள் பிளந்த சப்தத்தினால் மிகவும் பயந்த யசோதா மாதா நந்த கோபர், ரோஹிணி உடன் வந்து தன்னையுடைய மகனை மார்போடு அணைத்து தன்னுடைய செயலுக்கு மிகவும் வருந்தினாள். ஸ்ரீ கிருஷ்ணரும் பயப்படுவது போல் நடித்து தாயின் மார்பில் சாய்ந்தான். என்னே ஒரு மனோஹராமான நிகழ்வு!!! என்னே யசோதா மாதாவின் பாக்கியம்!!! மார்போடு ஸ்ரீ கிருஷ்ணரை அணைத்து சொல்லொண்ணா பரவச நிலையை அடைந்தாள். யசோதா மாதா அடைந்த பரவசத்தை ஸ்ரீ ப்ரஹ்மாவோ, ஸ்ரீ ருத்ர தேவரோ ஏன் ஸ்ரீ மஹாலக்ஷ்மியோ கூட பெற்றததில்லை.
தாமோதர அனுஷ்டிக்கும் முறை
ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்து, குறைந்தபக்ஷம் 1008 முறை அக்ஷ்டாக்ஷர மந்திரம்/ஹரி நாம ஜபம்/ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம் ""ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண... கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே! ஹரே ராம, ஹரே ராம... ராம, ராம, ஹரே ஹரே'' என்று ஜபித்து, உரலில் ஸ்ரீ கிருஷ்ணரை கட்டிய படத்துடன் வழிபடுவது அதி உத்தமம்.
ப்ரஹ்மசர்ய விரதம் அவசியம்.
மீன், மாமிசம், மற்றும் இதர அசைவ பொருட்களை மற்றும் மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் உண்ணக் கூடாது.
துளசி தீர்த்தம் பருகுவது புண்ணியம். நெய் தீபம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு காண்பிப்பது அபார பலன் தரும். ஸ்ரீமதி ராதாராணி நினைத்து ஸ்ரீ கிருஷ்ண ஜபம் புரிவது உத்தமம்.
துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி ஸ்ரீமன் நாராயணனை முறைப்படி பிரார்த்தனை செய்யவும்.
தூய பக்தர்களுக்கு தானம் வழங்குதல் நன்று.
தினமும் சுவையான பதார்த்தங்களைப் படைத்து பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள்.
‘ஸ்ரீ நாரத மகரிஷியும்’ மற்றும் ‘ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும்’ இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் முக்கியத்துவத்தையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரீதியான விரதம் என்றும் வலியுறுத்தினார்.
ஆயிரம் விஷ்ணு நாமங்கள் ஒரு ராம நாமத்துக்கு சமம் என்றும், மூன்று ராம நாமம் ஒரு கிருஷ்ண நாமத்துக்கு சமம் என்றும் சாஸ்த்திரங்களில் கூறப்பட்டு உள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.19.6).
கார்த்திக் மாதத்தில் ஸ்ரீமத் பாகவத பாராயணம் மகா கீர்த்தி, தேஜஸ், புண்ணியம் அளிக்கும் குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணர் உரலில் கட்டுண்ட படலத்தை படிப்பது அபார பலன் அளிக்கும். 18 புராணங்களையும் படித்த பலன் அன்று ஸ்ரீமத் பாகவத பராயணத்தினால் கிடைக்கும்.
ய: படேத் ப்ரயதோ நித்யம்
ஸ்லோகம் பாகவதாம் முனே
அஷ்டதச: புராணானாம்
கார்த்திகே பலம் அப்னுயத்
(ஹரி பக்தி விலாசம் 16.81)