Friday, May 29, 2020

மகாரதி அஸ்வத்தாமன்



 

மஹாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் முதன்மை கதாபாத்திரமாக விளங்குபவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. இதில் எண்ணற்ற கதாபாத்திரங்களும் மற்றும் எண்ணிலடங்கா கிளை கதைகளும் விளங்குகின்றன. பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் என புகழ்பெற்ற சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.! 

மஹாபாரத போரின் போது நடுநிவை வகித்தவர்கள்: பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி. போர் முடிவில் கௌரவர் தரப்பில் கிருபாச்சாரியார், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர்.
அப்படிப்பட்ட மாபெரும் இதிஹாசத்தில் ஒரு மாவீரன் அதுவும் ஒரு சிரஞ்சீவி இருக்கிறான் என்றால் நம்மால் நம்ப சற்று ஆச்சர்யமாகவும் அதே சமயம் அதிசயமாகவும் இருக்கும். அதை பற்றி சற்று விரிவாக அதே சமயம் இரத்தின சுருக்கமாகவும் பார்ப்போம்.
1) இந்து புராணங்களில் கூறியுள்ளபடி சப்த சிரஞ்சீவிகளில் ஒருவன் அஸ்வத்தாமன். மகாபாரதத்தில் வெல்ல முடியாத வீரர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் ஆனால் மரணமில்லாத வீரர்கள் யாருமே கிடையாது ஒருவரைத்தவிர, அவர்தான் குரு துரோணரின் ஒரே புதல்வன் அஸ்வத்தாமன். மற்ற அறுவர்: அனுமன், விபீஷணன், வியாசர், பரசுராமர், பலி சக்கரவர்த்தி, க்ரிபாச்சார்யர், (மார்க்கண்டேயன்)
அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:

அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
(அதிகாலையில் இவர்களின் நாமங்களை உச்சரிப்பது – இந்த ஸ்லோகத்தை சொல்வது – மங்களகரமானது என்பது நம்பிக்கை)

இவர்கள் எழுவரும் சிவாலய பாதுகாவலர்கள். சிவனையும் பாதுகாப்பவர்கள். நாம் சிவாலய தரிசனம் முடிந்து ஐந்து நிமிடமாவது கோவிலில் அமர்ந்து திரும்புவோம். அப்போது அந்த எழுவரும் நம் பாதுகாப்பாக நம் வீடுவரை வருவார்களாம். அதனால் கோவிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

2) பரசுராமரின் சீடனும், பரத்வாஜ முனிவரின் புதல்வனுமான துரோணருக்கும் கெளதம மகரிஷியின் பேத்தியும், முனிவர் ஷரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் புத்திர பாக்கியம் இல்லை. அதனால் சிவனை நோக்கி கடும் தவம் புரிகிறார் துரோணர்.  அவர் முன் தோன்றும் ஈசன் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்க "அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வனாக நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்கிறார்.  அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும்வரை சாகா வரம் பெற்ற மனிதனாக துவாபர யுகத்தில் தனது ருத்ர அவதாரத்தை எடுக்கிறார் எல்லாம் வல்ல ஈசன். அதன்படி அஸ்வத்தாமன் உயிருடன் இருக்கும் வரை மனித குலம் அழியாது என்று அமைந்தது. (அஸ்வத்தாமன் சிரஞ்சீவி அவனுக்கு மரணம் இல்லை, கல்கி அவதாரத்தில் பகவான் வரும்பொழுது அவரை அவன் சந்திப்பான், அப்பொழுது பூலோகம் நீங்குவான் அத்தோடு மனுகுலம் அழியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை, இதிகாசம் சொல்லும் உண்மையும் கூட). இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசிரியராக ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது.

3) குதிரையைப்போல் கனைக்கும் திறன் பெற்றதால் "அஸ்வத்தாமன்" என்று பெயர் சூட்டப்படுகிறார். 

4) தன் தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் தனுர் வித்தையும், தன் தாய் மாமன் கிருபாச்சாரியாரிடம் வியூக நுணுக்கங்களையும் கற்றுக்கொள்கிறார். "வில் வித்தையை முழுவதும் அறிந்தவர்கள் என்று கருதப்படுவது ஏழே ஏழு பேர்தான் பீஷ்மர், துரோணர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், அர்ஜூனன், கிருஷ்ணர். சக்கரவியூகத்தை உடைக்கும் திறன் பெற்ற மஹாரதி. விஷ்ணு புராணத்தின் படி, அடுத்த வ்யாஸ ரிஷியாக அஸ்வத்தாமன் 29 ஆவது மஹாயுகத்தில் , 7 ஆவது மன்வந்திரத்தில் அவதாரம் எடுக்கிறார் மற்றும் சப்தரிஷி ஆக 8 ஆவது மன்வந்திரத்தில் கிருஷ்ணர், த்வைபாயன  வ்யாஸர் மற்றும் பரசுராமருடன் இணைகிறார். 64 கலைகளிலும் 18 வித்தையிலும் கை தேர்ந்தவன்.

5) ஈசனுக்கு நெற்றிக்கண் போல இவர் நெற்றியில் ஒரு ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) உண்டு, அது இருக்கும் வரை எந்த உயிரினமும் அவரை கொல்லமுடியாது, அதுமட்டுமின்றி தன் தவ வலிமையால் அதர்வணம் என்ற வேதத்தை உருவாக்கி அந்த வேதத்தின் வித்தகனாக விளங்கினார். ருத்ர அம்சமாக கருதப்படுகிறான். அதனால் மிகப்பெரும் பராக்கிரமசாலியாக விளங்குகிறான். அவருடைய சக்திகள் அனைத்திற்கும் இந்த கல்லே மூலாதாராமாக அமைந்தது.! வில்வித்தை மற்றும் இதர போர் கலைகளில் சிறப்பாக செயலாற்றி ஒரு மிகச்சிறந்த போர் வீரராக அவர் வளர்ந்தார்.

பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது பகவான் கிருஷ்ணனை பார்க்கச்செல்கிறார் அஸ்வத்தாமன், அவரை வரவேற்ற கிருஷ்ணன் "என்ன வேண்டும்கேள் குரு மைந்தனே" என்று கேட்க " தங்களுடைய சுதர்சணச் சக்கரத்தை எனக்கு தானமாக தர வேண்டும்" என்று கேட்கிறார். சிரித்தவாரே "எடுத்துக்கொள்" என கிருஷ்ணர் சொல்ல, ஆவல் கொண்டு அதை எடுக்கிறார் அஸ்வத்தாமன் ஆனால் அவரால் அதை அசைக்ககூட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் அதை நகர்த்தக்கூட முடியவில்லை, அஸ்வத்தாமனின் முயற்ச்சியைக் கண்ட பகவான் "எதற்க்காக உனக்கு இது தேவை நண்பனே" என்று கேட்க "இன்னும் சிறிது காலத்தில் பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் போர் நடக்கும், அதில் நான் துரியோதணனை காக்க வேண்டும், பகவானாகிய நீங்கள் பாண்டவர்களுக்கு துணை நிற்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும், நீங்கள் இருக்கும்வரை அவர்களை வெல்லமுடியாது என்பதும் எனக்கு தெரியும் ஆகவே அன்புக் கடவுளே உம்மை வதைக்கவே உமது சுதர்சணம் எனக்கு வேண்டும்" என்று சொல்ல, மெய்சிலிர்த்து போகிறார் பகவான் பரந்தாமன்.
 
"உன் வீரம் கண்டு நான் வியக்கிறேன் அஸ்வத்தாமா, சுதர்சணம் கொண்டு என்னை கொல்ல இயலாது ஆனால் போரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் கொன்று உன் நண்பனைக் காப்பாற்ற என்னுடைய அஸ்திரமான நாரயண அஸ்திரத்தை உனக்கு வரமாகத் தருகிறேன். இந்த அஸ்திரத்தை நீ செலுத்திய அடுத்தநொடி முப்பத்துமுக்கோடி தேவர்களும் உன் பின்னே தோன்றி உனக்கு எதிராக ஆயுதம் ஏந்தி நிற்க்கும் அத்தனை வீரர்களையும் வீழ்த்துவார்கள்" என வரமளிக்கிறார். ஆயினும் இந்த அஸ்திரத்தால் மனம் திருப்தியடையாத அஸ்வத்தாமன் தன் தவ வலிமையைக்கொண்டும், தன்னால் உருவாக்கப்பட்ட அதர்வண வேதத்தின் சக்தியைக்கொண்டும் எல்லாம் வல்ல ஈசனையும் சக்தியையும் முதற்கடவுளாக உருவேற்றி பாசுபதாஸ்த்திரம் என்று சொல்லப்படும் சிவ பானத்தை உலகிலேயே மிகவும் சக்திமிக்க ஒரு அஸ்திரமாக மாற்றுகிறார்.(பாசுபதாஸ்த்திரம் - எல்லாம் வல்ல பரமேஸ்வரனால் உருவாக்கப்பட்டு ராமாயணத்தில் இராவணனின் மைந்தன் மேகனாதனுக்கும், மகாபாரதத்தில் அர்ஜீனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் கொடுக்கப்பட்டது, மற்ற அஸ்திரங்களைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது, தன்னைவிட பலம் அதிகம்கொண்ட எதிரியின்மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும், தர்ம வழியில் நடப்பவர்களால் மட்டுமே இதை எதிரிகள் மீது பயன்படுத்தமுடியும்). எப்படிப்பட்ட இலக்கையும் அழிக்க வல்ல பாசுபதாஸ்த்திரம் கொண்டு பாண்டவர்களை அழிப்பேன் என்று சூளுரைக்கிறார்.

6) பாசுபதாஸ்திரம் மற்றும் நாராயண அஸ்த்திரத்தை முறையாக கற்றபின் தன் தந்தையிடம் பிரம்மாஸ்திரத்தையும் கற்றுக்கொள்கிறார். துவாபர யுகத்தில் மும்மூர்த்திகளின் அஸ்திரங்களைப் பெற்ற ஒரே மாவீரனாக திகழ்கிறார் (ராமாயணத்தில் இராவணனின் மகன் இந்திரஜித்துக்குப் பிறகு மூன்று அஸ்திரங்களையும் வரமாகப் பெற்றவர் அஸ்வத்தாமன் மட்டுமே).

7) அடுத்த ஒரு முக்கியமான தகவல் அஸ்வத்தாமன் ஒரு மகாரதி. யுத்தத்தில் படை நடத்துவதிலும், வியூகங்கள் வகுப்பதிலும், எதிரிகள் மீது தாக்குதல்கள் தொடுப்பதிலும் முன் நிற்கும் தளகர்த்தர்களை ஐந்து வகைகளில் பிரிக்கலாம்.

  • ரதி
  • அதிரதி
  • மகாரதி 
  • அதிமகாரதி
  • மகாமகாரதி
ரதி எனப்படுவோர் 5000 படைவீரர்கள் கொண்ட படைகள் மீது போர் தொடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

சகுனி, சிசுபாலன், போன்றோரும் துரியோதனனின் 90 க்கு மேற்பட்ட தம்பிகளும் ரதி வகையை சேர்ந்த தளகர்த்தர்கள்.

அதிரதி எனப்படுவோர் 12 ரதிகளுக்கு சமமானவர்கள். அல்லது 60,000 படைவீரர்கள் கொண்ட படைகள் மீது போர் தொடுக்கும் வல்லமை பெற்றவர்கள். 

தர்மர், நகுலன், சகாதேவன், துச்சாதனன், ஜெயத்ரதன் மற்றும் துரியோதனன் போன்றோர் அதிரதி வகையை சேர்ந்த பெருமைமிக்க வீரர்கள்.

மகாரதி 12 அதிரதிகளுக்கு சமானமானவர்கள். 7,20,000 வீரர்கள் கொண்ட படைகளுடன் மோதும் வலிமை பெற்றவர்கள்.

பீஷ்மர், துரோணர், அர்ஜுனன், கர்ணன், பீமன்... இவர்களுடன் அஸ்வத்தாமனும் மகாரதி வரிசையில் வருபவன். 

அதிமகாரதி 12 மகாரதிகளுக்கு இணையானவர்கள். 86,40,000 வீரர்களுடன் சண்டை போடும் திறன் மிக்கோர். 

ராமர், கிருஷ்ணர், இந்திரஜித், ஹனுமார் போன்றோருடன் சிவனின் அவதாரங்களாகிய வீரபத்ரர், பைரவர் ஆகியோரும் அதிமகாரதி ஆவார்கள்.

இந்த படி நிலையில் முதன்மையானோர் மகாமகாரதி. இவர்கள் 12 அதிமகாரதிகளுக்கு இணையாக அல்லது 20,73,60,000 வீரர்களுடன் போர்புரியும் திறன் பெற்றோர். இவர்களே மகத்தானவர்கள். 

முழுமுதல் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, கணேசர் மற்றும் கார்த்திகேயர் ஆகியோரே மகாமகாரதிகள். அவர்களை மிஞ்சி எவருமிலர்.

கீழிருந்து மேலாக செல்லும் வரிசையில் மூன்றாவது நிலையில் இருந்த மாவீரன் அஸ்வத்தாமன்.

8) துரியோதனனுக்கு மிகவும் நெருக்கமானவன். அவனின் பலம் அறிந்தோர் இருவரே ஒருவர் துரோணர், இன்னொருவர் கண்ணன். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கௌரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என கிருஷ்ண பரமாத்மாவுக்கு தெரியும். அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.

அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான். அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான். அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினான். அதை துரியோதனன் பார்ப்பான் என்று கிருஷ்ணருக்கு தெரியும். அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் பின்னர் கிருஷ்ணனின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

இதை பார்த்த துரியோதனன், 'நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்' என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான். இந்த சந்தேகத்தால், அவனை கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை. கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைத்தான். அஸ்வத்தாமன் மீது துரியோதனன் பட்ட சந்தேகம் போரில் கவுரவர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனாலே அஸ்வத்தாமனோடு உறவாடி துரியனுக்கு சந்தேகம் ஏற்படுத்தி அவன் படை தளபதி ஆகாதாவறு தடுத்தான் கண்ணன், தேர்ந்த ராஜதந்திரம் அது.
 
9) உண்மையில் பாரதபோரின் மிக முக்கிய கட்டமே அஸ்வத்தாமன் வரவில்தான் உண்டு, பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜெயத்ரதன் என எல்லோரும் மடிந்துவிட்ட நிலையில் உண்மையான சண்டையினை தொடக்கினான் அஸ்வத்தாமன். அந்த கட்டமே மிக பிரளயமான கட்டம், வெறிகொண்ட சிம்மமாக அவன் ஆடிய ஆட்டத்தில் பாண்டவ சேனை கலங்கி நின்றது.

10) 13ம் நாள் போரில் அபிமன்யுவின் கோர மரணத்திற்கு காரணமான மகாரதிகளில் இவரும் ஒருவர்.

11) பீமனின் புதல்வன் கடோத்கஜனையும், அவனுடைய மகன் அர்ஜனபர்வாவையும் அழித்தான்; இதனால், பீமனின் பரம்பரையே நிர்மூலமானது. அதுமட்டுமா? துருபத ராஜகுமாரன், சத்ரும்ஜயன், பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், அரசன் சிருதாஹு போன்றவர்களை அழித்து, துரியோதனனுக்கு உரமூட்டினான். குந்திபோஜனின் பத்து மகன்களையும் அழித்து, எதிரிகளுக்கு தனது வீரத்தை உணர்த்தினான். சிகண்டியின் மகன்கள் அனைவரையும் தன் கரங்களால் வதைக்கிறார்.

12) 15ம் நாள் போரில் தன் தந்தை துரோணாரை ஏமாற்றி கொலை செய்யும் பாண்டவர்களை அழித்தே தீருவேன் என்று அஸ்வத்தாமா சத்தியம் செய்கிறார், பாண்டவசேனையின் ஒரு பகுதியை தன் திவ்ய அஸ்திரங்கள் கொண்டு அழிக்கிறார். 16ம் நாள் போர்க்களத்தில் தன் தந்தையின் மரணத்திற்கு பழிதீர்க்க எண்ணி பகவான் விஷ்ணுவின் நாராயண அஸ்திரத்தை விண்ணை நோக்கி செலுத்தி பாண்டவ சேனையை அழிக்க உத்தரவு இடுகிறார். நாராயண அஸ்திரத்தால் முப்பத்துமுக்கோடி தேவர்களும் விண்ணில் தோன்றி பாண்டவ சேனைமீது அஸ்திரம் தொடுக்கிறார்கள். 33 கோடி அம்புகள் தங்கள் சேனையை நோக்கி வருவதைக் கண்டு செய்வதறியாது திகைக்கிறார்கள் பாண்டவர்கள்.

அந்த ஆயுதம் "நம் அனைவரையும் அழித்துவிடும்" என்று அலறினார் தருமர். கிருஷ்ணர் பாண்டவரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம், அந்த ஆயுதத்தை எதிர்க்காமல் உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுத் தேரிலிருந்து கீழே இறங்கி அதை வணங்கினால் ஒன்றும் செய்யாது என்றார். பீமனைத் தவிர அனைவரும் அப்படியே செய்தனர். பீமன் துரோணரின் மகனை நோக்கித் தனது தேரைச் செலுத்தினான், தனது கதையை வேகமாகச் சுழற்றினான், நாராயண ஆயுதம் அவனை சூழ்ந்து கொள்ள அருச்சுனனும், கிருஷ்ணரும் பீமனை வலுக்கட்டாயமாகத் தேரிலிருந்து கீழே இறக்கி, ஆயுதங்களைக் கீழே போட வைத்து அவனைக் காப்பாற்றினர். கிருஷ்ணரின் சொல்படி தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தரையில் மண்டியிட்டு கைகூப்பி வணங்கி உயிர் தானம் வேண்டுகிறார்கள். அம்புமாரி பொழிவதை நிறுத்திவிட்டு தேவர்கள் மறைகிறார்கள், பாண்டவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். நாராயணாஸ்திரம் வலுவிழந்தும்கூட, பதறவில்லை அஸ்வத்தாமா. முழு நம்பிக்கையுடன் ஆக்னேயாஸ்திரத்தை ஏவினான். நெருப்பை உமிழும் அந்த அஸ்திரத்தால், திக்குமுக்காடிப் போனார்கள் எதிரிகள், பகவான் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் நெருங்கவில்லை அஸ்திரம். அதுமட்டுமின்றி, த்ருஷ்டத்யும்னனையும் அழிக்க இயலவில்லை. இதைக் கண்டு அதிர்ந்தான் அஸ்வத்தாமா. அப்போது வியாசர் தோன்றி, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமந் நாராயணன் ஆவார். அர்ஜுனன், அவரது அம்சத்துடன் விளங்கும் நரன். நர நாராயணரை வெல்வது சுலபமல்ல என அறிவுறுத்தினார். எனவே, நர நாராயணர்களை மனதில் வேண்டி, படைகளுடன் வெளியேறினான் அஸ்வத்தாமா, பிறகு, கர்ணனின் தலைமையில் போரில் இணைந்தவன், த்ருஷ்டத்யும்னனை அழிக்காமல் அஸ்திரத்தைக் களையமாட்டேன் என சூளுரைத்தான். 18-ஆம் நாள் யுத்தம். பீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டையிட்டனர். இதில் அடிபட்டு தரையில் வீழ்ந்தான் துரியோதனன்.

அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.

பதவியேற்ற அன்றைய இரவு, அஸ்வத்தாமா தூங்கவே இல்லை. கொடுத்த வாக்குறுதியால் தூக்கம் வரவில்லை. தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றான். உடன் இருந்த இருவரும் உறங்கிவிட, இவன் மட்டும் மரத்தடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடுமென ஆந்தையின் ஒலி கேட்டு, மரக்கிளையை கவனித்தான். ஆந்தை ஒன்று, கூட்டினில் உறங்கிக்கொண்டிருந்த காக்கைக் குஞ்சுகளை அழித்துவிட்டு வெளியேறியது. சட்டென்று அவனுக்குள், பாண்டவர்களின் வாரிசுகளையும் அப்படித்தான் அழிக்கவேண்டும் எனச் சிந்தித்தான். இது தெய்வம் காட்டிய வழி எனச் சிலிர்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, தனது திட்டத்தை எடுத்துரைத்தான். ஆனால் கிருபாசார்யர், தவறான வழியில் பழிவாங்குவது தவறு; கௌரவ அழிவுக்குக் காரணமாகிவிடும். வேண்டாம். எதையும் போர்க்களத்தில் சந்திப்போம்; சாதிப்போம் என்றார். அவற்றைக் கேட்கும் மனநிலையில் அஸ்வத்தாமா இல்லை. வேறுவழியின்றி, மூவரும் அன்றிரவே பாண்டவர்களின் கூடாரத்தை நெருங்கினர்.

கண்ணில் பட்டவரையெல்லாம் தன் தந்தையின் குருவான பகவான் பரசுராமர் தனக்கு கொடுத்த அற்புத வாள் கொண்டு சிதைக்கும் அஸ்வத்தாமனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் கிருஷ்ணர், பாண்டவர்களையும் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக காட்டிற்குள் செல்கிறார். போகும்முன்பு களிமண்ணால் ஒரு பூத உருவத்தை செய்து நான் திரும்பி வரும்வரை இங்கு நீதான் காவல் காக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

அந்த எல்லையை கடக்க நினைக்கும் அஸ்வத்தாமனை அந்த பூதம் தடுக்கிறது. அஸ்வத்தாமனின் தனுர் வித்தைக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும், அதர்வண வேத சக்திகளுக்கும் அந்த பூதம் மசியவேயில்லை. கடைசியாக தன்னிடம் இருக்கும் சிவனின் அஸ்திரமும், இந்த பூவுலகிலேயே மிகவும் சக்திவாய்ந்ததும், எப்படிப்பட்ட இலக்கையும் அழிக்கவல்லதும், ஈடு இணையற்றதுமான பாசுபதாஸ்திரத்தை எடுத்து அந்த பூதத்தின் மீது ஏவுகிறார் அஸ்வத்தாமன். ஆனால் அந்த பூதமோ பாசுபதாஸ்திரத்தை சோற்றுக்கவளத்தை விழுங்குவதுபோல் விழுங்கிவிட்டு அஸ்வத்தாமனைப் பார்த்து ஏளனமாக சிரித்தது.

பாசுபதாஸ்திரத்தை பூதம் தனக்குள் அடக்கியதும் அஸ்வத்தாமன் தன் அஸ்திரங்களையெல்லாம் தியாகம் செய்கிறார், அந்த உருவத்தின் முன் மண்டியிட்டு "இந்த ஜகத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைத்தவிர வேறு எவருக்கும் பாசுபதம் கட்டுப்படாது, அப்படிபட்ட பாசுபதத்தை கட்டுப்படுத்திய நான்காவது நபரான நீங்கள் யார் தயவுசெய்து சொல்லுங்கள்?" என்று மனமுருக வேண்ட, தன் சுயரூபம் காட்டுகிறார் எல்லாம் வல்ல ஈசன். தன் உதிரத்தால் ஈசன் பாதம் நனைத்து தன் பக்தியை வெளிப்படுத்துகிறார் அஸ்வத்தாமன். கிருஷ்ணரின் வேண்டுகோள்படி பாண்டவ கூடாரத்திற்கு காவல் நிற்கும் ஈசன் மகிழ்ந்து "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்க "பாண்டவ கூடாரத்திற்குள் என்னை செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டுகிறார். வரம் தர மறுக்கிறார் ஈசன், உடனே "என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள் இல்லையென்றால் உங்கள் கண்முன்னே என் உயிர் நீப்பேன்" என்று தன் சிரம் கொய்கிறார் அஸ்வத்தாமன். அவருடைய பிறப்பு ரகசியம் தெரிந்த ஈசன் (அஸ்வத்தாமனின் மரணம் என்பது மனித இனத்தின் முடிவு), அவர் பக்தியையும் விடாமுயற்சியையும் பாராட்டி தன் வாளை பரிசளித்துவிட்டு அங்கிருந்து மறைகிறார்.

சிவனின் வாளுடன் பாண்டவ கூடாரத்திற்குள் நுழையும் அஸ்வத்தாமன் தன் கண்ணில் பட்டதையெல்லாம் சர்வ நாசம் செய்கிறார்.  திரவுபதியின் ஐந்து மகன்களையும், சிகண்டி, திருஷ்டதுய்மணன் மற்றும் ஏனைய வீரர்களையும் கொன்று குவிக்கிறார். குறிப்பாக திரவுபதியின் மகன்களை உறக்கத்தில் இருக்கும்போதே கொலை செய்கிறார். 

உபபாண்டவர்கள் (பிரிதிவிந்தியன், சூதசோமா, சுரூதகீர்த்தி, சதானிகா, மற்றும் சுரூதசேனா) என பெயர் பெற்ற அவர்கள் முன்னொரு காலத்தில் அரிச்சந்திர மகாராஜாவை மிகவும் சோதித்த விஸ்வாமித்திர முனிவரால் சாபம் பெற்ற குருநில தெய்வங்களாவர். விஸ்வாமித்திரரின் சாபத்தின்படி மனித பிறப்பெடுத்து உறக்கத்திலேயே அந்த ஈசனின் அம்சம் பெற்ற ஒருவனால் மரணம் நிகழும் என்பது அவர்கள் விதி. அதன்படி அஸ்வத்தாமனால் மரணம் நிகழ்ந்து மீண்டும் சொர்க்கம் சென்றனர். 

தன் தந்தையின் சாவுக்கு காரணமான திருஷ்டதுய்மணனை ஆயுதம் இன்றி வெறும் கைகளாலேயே அடித்து அவன் சிரசை உடலில் இருந்து பிய்த்து எடுக்கிறார். மொத்த பாண்டவ சேனையையும் ஒரே ஆளாய் நின்று அழித்து, தீ வைத்து எரிக்கிறார்.

மறுநாள் காலை வந்து பார்க்கும் பாண்டவர்கள் துடிதுடித்து போகிறார்கள். மகன்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. அஸ்வத்தாமாவின் சிரசைக் கொய்து உன்னிடம் தருகிறேன் என சூளுரைத்தான் அர்ஜுனன். ஸ்ரீ கிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட ஆயத்தமானான். கிருஷ்ணனிடம், "18 நாள் போரில் எங்களை எதுவும் செய்ய முடியாத அஸ்வத்தாமனால் இது எப்படி சாத்தியமாயிற்று" என்று கேட்ட தர்மனிடம் "அஸ்வத்தாமன் சக்தி அளவிடமுடியாதது, அது யாருக்கும் தெரியாமல் போனதால்தான் துரியோதணன் தோற்றான், அஸ்வத்தாமன் மட்டும் கெளரவர்களின் தளபதியாக ஒருநாள் இருந்திருந்தால் தன் அதர்வண வேதத்தின் துணைகொண்டு ஒரேநாளில் போரை வென்றிருப்பான், அவன் நெற்றியில் உள்ள ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) அவனிடம் உள்ளவரை அவனை கொல்வதென்பது நடவாது" என்று சொல்கிறார் கிருஷ்ணர்.

13) ஆற்றங்கரையோரம் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்துகொண்டிருக்கும் அஸ்வத்தாமனை அழிக்க திட்டம் போடுகிறார்கள் பாண்டவர்கள், பிரம்மாஸ்திரம் தவிர வேறு எந்த அஸ்திரம் கொண்டும் அவரை சாய்க்க முடியாது என்று கிருஷ்ணர் மூலம் தெரிந்து கொள்ளும் அர்ஜுனன் அவரை நோக்கி பிரம்மாஸ்த்திரத்தை செலுத்த, தன் தவ வலிமையால் இதை உணர்ந்து கொள்ளும் அஸ்வத்தாமன் தன் கையில் உள்ள தர்ப்பை புல்லை வேத சக்திகொண்டு பிரம்மாஸ்திரமாக மாற்றி அர்ஜுனனின் அஸ்திரத்துக்கு எதிராக எய்கிறார். இரு பிரம்மாஸ்திரங்களும் ஒன்றோடு ஒன்று மோத வானில் தீப்பிழம்பு தோன்றி அனைத்து உயிர்களும் அஞ்சி நடுங்கின.

ஒரே நேரத்தில் இரு பிரம்மாஸ்திரங்கள் மோதிக் கொண்டால் பூமி அழிவைச் சந்திக்கும் என்பதை உணர்ந்த வேத வியாசர் தன் ஞான சக்தியின் மூலம் இரு பிரம்மாஸ்திரங்களையும் தடுக்கிறார். அர்ஜீனனையும் அஸ்வத்தாமனையும் பிரம்மாஸ்திரங்களை திரும்பப்பெறச் சொல்கிறார். அர்ஜூனன் பிரம்மாஸ்திரத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள, அஸ்வந்தாமனோ மறுக்கிறார். உயிர்களின் நலன் கருதி யாராவது ஒரு உயிரை தானமாக தர முன் வருகிறான் தருமன், ஆகையால், அஸ்வத்தாமனோ அபிமன்யுவின் மனைவி உத்திரையின் கருவை நோக்கி செலுத்துகிறார். அவள் கருவை அழித்து உறைவிடம் செல்கிறது பிரம்மாஸ்திரம். காவியங்களில் முதல் கருவறுத்தல் என்ற நிகழ்ச்சிக்கு வித்திட்டவர் அஸ்வத்தாமன்.  உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பகவான் கிருஷ்ணர், காத்தார்;

பரீக்ஷித்து உதயமாவதற்கு உதவினார்.  அத்தோடு பாண்டவர் மற்றும் பாஞ்சால தேசத்தின் அனைத்து வாரிசுகளும் அழிந்து போகிறார்கள். அஸ்வத்தாமனின் செயல் கண்டு வெகுண்டு எழுகிறார் ஸ்ரீகிருஷ்ணர், அஸ்வத்தாமனை அழிக்க தன் சுதர்சண சக்கரத்தை ஏவுகிறார், ஆனால் அஸ்வத்தாமன் நெற்றியில் இருக்கும் ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) அவரை காப்பாற்றுகிறது. அவருடைய ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணியை) பறிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

14) மகா பாரதத்தில் அஸ்வத்தாமன் கொல்லப்படுவதில்லை. மாறாக அவன் சிகை நீக்கப்படுகிறது. கௌரவம் அழிக்கப்படுகிறது. ஒருவனை மொட்டையடித்து வீதிகளில் ஊர்வலமாக அனுப்புதல் பெரிய தண்டனையாக கருதப்படுகிறது. அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது. அஸ்வத்தாமனை இப்படி செய்துவிடுகிறார்கள். அஸ்வத்தாமனுக்கு இந்த சாகாவரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம்தான். இந்த சாபம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் உத்திரையின் கருவில் இருந்த அபிமன்யுவின் குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்திற்காக கிருஷ்ணர் அவனிடம் இருந்த மரணத்தை பறித்து கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இவ்வாறு செய்தார்.

"கருவில் இருக்கும் குழந்தையைகூட கொன்ற மகாபாதகனான நீ பூமி அழியும்வரை உயிரோடு இருந்தாலும் உனக்கு உறவென்று யாரும் இருக்கமாட்டார்கள், உன் ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) உன்னிடம் இல்லாததால் இனி உன்னை எந்த நோயும் தீண்டும், உன் முன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும் நிற்காமல் வடியும், உனக்கு பசியோ, தாகமோ, தூக்கமோ எதுவும் இருக்காது, மனித நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நீ நுழையக்கூடாது" என்று சாபம் இடுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். உடனே "பகவானே, நான் செய்தது குற்றமென்றால் நீங்களும் பாண்டவர்களும் செய்தது எந்த விதத்திலும் தர்மம் இல்லை, நீங்கள் இட்ட சாபம் என்னை கேட்குமாயேன் அதன் முழுகாரணகர்த்தா தாங்களே, அதனால் என் தேகத்தில் இருந்து வடியும் உதிரத்தை காலம் உள்ளவரை அருந்திக் குடிக்கும் புழுவாக தாங்கள் ஜனனம் எடுக்கவேண்டும்" என்று சாபம் தருகிறார். கடவுளால் சாபம் பெற்ற ஒரே மனிதனும், கடவுளுக்கே சாபம் தந்த ஒரே மனிதனும் அஸ்வத்தாமனே.

15) தருமன் அஸ்தினாபுர அரியணை ஏறியதும் காட்டுக்குள் சென்று வேத வியாசரின் ஆசிரமத்தில் சேர்ந்து வேதங்களை போதிக்கிறார் அஸ்வத்தாமன். மனவந்திரங்களையும், அதர்வண வேதத்தையும் திருத்தி எழுதுகிறார். வியாசரின் அறிவுரைப்படி அன்னை யோகமாயாவை நோக்கி தவம் புரிந்து ஸ்ரீகிருஷ்ணரின் சாபத்தில் இருந்து விடுபடுகிறார்."துவாபர யுகம் முடிந்து கலி யுகத்தில் கி. பி 4044ம் வருடம் நான் கல்கி அவதாரம் எடுக்கும் சமயத்தில் நீயும் நானும் சந்திப்போம், அப்போதுதான் உனக்கு முக்தி கிடைக்கும், அதுவே மனித குலத்தின் அழிவும் ஆகும், அதுவரை மனித இனத்திற்காக நீ வாழவேண்டும்" என்று வரமளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

16) 36 ஆண்டுகள் கழித்து பரிக்ஷித்து மகாராஜன் அரியணை ஏற்றதும் தம் வாழ்நாளை முடித்துக் கொள்ள இமயம் புறப்பட்ட பாண்டவர்கள் அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும், அதன் பிறகு அவர் மனித சமுதாயத்தின் கண்ணில் படவில்லை என்றும் புராணங்கள் சொல்கின்றன.

17) இன்றும் குஜராத் மாநிலத்தின் ஆசிர்கார் மாவட்டத்தில் உள்ள மலைக்காடுகளில் அவர் சுற்றி வருவதாகவும், பலர் அவரை நேரில் கண்டதாகவும் வதந்திகள் உண்டு. அவர் நெற்றியில் பெரிய காயமும் அதில் இருந்து உதிரம் வடிந்துகொண்டே இருக்கும் என்றும், அவர் சுமார் 10 அடி உயரம் இருப்பார் என்றும் மக்களிடையே ஒரு பேச்சு. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. அந்த மலையில் உள்ள மிகப்பழமையான சிவன் கோவிலுக்கு தினமும் அதிகாலையில் வந்து அவர் பூஜித்து செல்வதாகவும், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்காத மலர்களும், இமயத்தின் சாரல்களில் மட்டுமே வளரும் அதிசயமான மலர்களைக் கொண்டு அர்ச்சணை செய்வதாகவும் அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இமயமலை அடிவாரத்தில் சில பழங்குடியினருடன் அஸ்வத்தாமா நடந்தும் வாழ்ந்தும் வருவதை சிலர் கண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்

18) இந்த கட்டுக்கதைகள் உண்மையோ பொய்யோ அது நமக்கு தேவையில்லை, சரித்திரம் போற்றும் ஒரு சிரஞ்சீவி வாழ்ந்திருக்கிறார், அவரை கொல்ல யாராலும் முடியாது, அனைத்து அஸ்திர சாஸ்திரமும் தெரிந்த ஒரே துவாபர யுகத்தின் நாயகன், போன யுகத்திற்கும் இந்த யுகத்திற்கும் பாலமாக இருக்கும் கடைசி மானிடன். சிவ தொண்டில் தலைசிறந்த பக்தன், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமான பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்த்திரம், பாசுபாதஸ்த்திரம் தெரிந்த ஒரே மாவீரன், மனித குலம் வாழவேண்டும் என்று தன் சாவை தினந்தினம் தள்ளி வைக்கும் தயாளன் அஸ்வத்தாமன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

19) ‘எந்த ஒரு மனிதர் மந்திர பலத்தில் சிறந்தவராக திகழ்கிறாரோ, அவர் அஸ்வத்தாமனின் அம்சம்’ என்று கூறுவார்கள்.

இவருக்குண்டான காயத்ரி மந்திரம்.

“ஓம் ஸ்திராபுஷ்மன்தாய வித்மஹே
த்ரோண புத்ராய தீமஹி
தந்நோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்”


நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்...

ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ...
ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ...
ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ...
ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி நமஹ... 
ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ...
ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ...
ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ...

வலது கையில் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஓன்றிரண்டு அருகம்புல் போட்டு, வடக்கு நோக்கி அமர்ந்தோ, நின்றோ சிரஞ்சீவிகளான இந்த ஏழுவரின் நாமங்களையும் 21 தடவை ஜெபித்து, பின்னர் அந்த நீரை அருந்தி வர தீரா நோய்கள் தீருவதுடன் அகால மரணம் ஏற்படாமல் காக்கும்.

முடியாதவர்கள் எழுந்த உடனும் உறங்கும் முன்னரும் மூன்று முறையாவது ஜபித்து வர மேற்கண்ட பலனில் பாதி கிட்டும்.







Friday, May 22, 2020

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்


அவதாரம் மற்றும் குருகுல வாசம் 
ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. போதேந்திர சரஸ்வதி, ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியவர்களுடன் ஒரே குருகுலத்தில் வேதம் பயின்றவர். ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் மற்றும் ஸ்ரீ தியாக ப்ரஹ்மம் இவரின் சமகாலத்தவர்கள்.

தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அதுவே வேத வாக்காக குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார். அதன்பின்னர் அத்வைதானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

அற்புதங்கள்
(i) ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா?
ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை. வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை! ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை.

துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!

வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர்.

மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது. .

சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது! சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

(ii) இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார்.

(iii) அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

(iii) புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர் (விஜய ரகுநாத தொண்டைமான்- கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு), எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். 

மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை. பின் ஒருநாள், என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும் என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். 

அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

(iv) ஒரு சமயம் தாம்பிரபரணி நதிக்கரை ஓரமாயுள்ள காடுகளில் இவர் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது அந்நாட்டு பாளையப்பட்டு தலைவனின் சேனைக்கு காட்டில் இருந்து விறகுக் கட்டுகள் போய்க் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் இந்த நிர்வாண சாமியைக் கண்ட ஓர் அரண்மனை சிப்பந்தி இவருக்கு ஓர் ஆடையைக் கொடுத்து ஓர் சுமை விறகை தலையில் ஏற்றி அனுப்பினான். ஞானி தன்னுடைய நிலையை அவனுக்கு அதே சமயத்தில் எத்தனையோ விதங்களில் உணர்த்தியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஓர் வேடிக்கையுடன் உணர்த்த வேண்டும் என்று மனம் கொண்டார். விறகை சில மைல்கள் வரையில் சுமந்து உற்ற இடத்தை அடைந்து, அங்கு குவிக்கப் பட்டிருந்த விறகுகளின் மேல் தொப்பென்று போட்டார். விறகுக் குவியல் குபீரென்று தீப்பற்றி எரிந்தது! ஏதோ ஓர் மகான் என்பதை கண்டு கொண்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் மேலும் யாது நடக்குமோ என்று பயந்து நின்றார்கள். சிலர் காலில் விழுந்து மன்னித்து அருள கேட்டுக் கொண்டார்கள். விறகுக் குவியல் ஒரே நொடியில் பஸ்பம் ஆகி விட்டது. ஆனாலும் இரண்டு குவியலுக்கு அநுக்ரஹித்து விட்டு கிளம்பி விட்டார். அதாவது அந்த இடத்தில் எவ்வளவு விறகுகள் குவிக்கப் பட்டிருந்தனவோ, அதைப் போல இரண்டு மடங்கு விறகுகளை அதே இடத்தில் அவர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்!

(v) சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ஆத்மவித்யா விலாசம்என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

(vi) ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து நடந்த நிகழ்ச்சி இது. அப்போது சிருங்கேரியில் ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள். அவருக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம். அப்போது அதைப் பற்றி கலந்து உரையாடித் தெளிய யாரும் இல்லாத நிலையிருந்ததாம். அதாவது ப்ரம்ஹ ஞானத்தை அடைந்தவர், உணர்ந்தவர் மட்டுமே தெளிவிக்க முடியும் என்பதால் அவ்வாறான ஒருவரைத் தேடியபோது, ஸ்ரீசதாசிவர் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். தமது விஜய யாத்திரையில் தென் பகுதிக்கு வரும் போது சதாசிவ பிரம்மேந்திரரது அதிஷ்டானத்தை அடைந்து பிரார்த்தனை செய்ய முடிவு செய்கிறார்.

சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கரூர் அருகில் இருக்கும் மஹாதானபுரம் என்னும் கிராமத்தில் இருக்கிறது. அங்கு வந்த ஸ்ரீ ஆசார்யர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்திற்கு பல்லக்கில் போகிறார். போகும் பல்லக்கு மிகவும் நிதானமாகச் செல்வதாக உணர்ந்து போகிகளிடம் காரணம் கேட்கிறார். போகிகள் தாம் பல்லக்குடன் முன்னே செல்கையில் தம்மை யாரோ பின்புரம் தள்ளுவதாக உணர்வதால் எதிர்த்துச் செல்வது சிரமாக, அதிக நேரம் பிடிப்பதாகச் சொல்கின்றனர். தமது திருஷ்டியில் இது பிரம்மேந்திரரைப் பார்க்கச் செல்லும் முறையல்லஎன்று உணர்ந்து, பல்லக்கிலிருந்து இறங்கி தமது கை நீட்டி அது நீளூம் வரையில் நடந்து, பிறகு ஒரு நமஸ்காரம் செய்து பின்னர் இன்னொரு கை தூரம் நடந்து மீண்டும் நமஸ்காரம் செய்வதுமாகச் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெரூரை அடைந்தாராம்.

நெரூரை அடைந்த ஆசார்யார் தமது அனுஷ்டானங்களைக் காவிரிக் கரையில் முடித்துக் கொண்டு ப்ரமேந்திரரது  அதிஷ்டான வளாகத்தினுள் சென்று கொண்டு, வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் தாமே திரும்பி வந்து பேசும் வரையில் எந்த விதத்திலும் தன்னுடன் தொடர்பு கூடாது, எல்லோரும் திருமதிலுக்கு வெளியிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அன்ன ஆகாரமின்றி, யாரிடமும் ஏதும் பேசாது அதிஷ்டானத்தின் முன்பு தியானத்தில் அமர்ந்து விட்டாராம். மூன்று நாட்கள் இவ்வாறாக இருந்திருக்கிறார். காலை-மாலையில் காவேரிக் கரைக்கு வந்து ஸ்னாநாதிகளை முடித்துக் கொண்டு செல்வாராம். ஏதும் பேசுவதோ, அல்லது பிக்ஷை எடுத்துக் கொள்ளவோ இல்லையாம். பக்தர்கள் எல்லோரும் திருமதிலுக்கு வெளியே அன்ன ஆகாரமின்றி ஆசார்யாரது பிக்ஷைக்குப் பின்னரே உணவு எடுத்துக் கொள்வதாக உறுதியெடுத்து காத்திருந்தார்களாம்.

மூன்றாம் நாள் இரவு மதிலுக்குள்ளிருந்து இருவர் பேசிக்கொள்வது காதில் கேட்டதாம். ஒரு குரல் ஆசார்யாரது குரலாக இருப்பதை உணர்ந்தனர், இன்னொன்று சதாசிவ பிரம்மத்தினுடைதாக இருக்கலாம் என்று நினைத்து, மறுநாள் ஆசார்யார் சொல்வார் என்றும் ஆசார்யார் சதாசிவ பிரம்மத்திற்கு பூஜை செய்தால் அதன் மூலம் அவரது குருவாக சதாசிவத்தை ஏற்றது தெரியும் என்றும் முடிவு செய்து காத்திருந்தனராம்.

எதிர் பார்த்தது போலவே ஸ்ரீ ஸ்வாமிகள் மறுநாள் வெளியில் வருகையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தை போற்றி 45 ஸ்லோகங்களை [ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவம்] எழுதி எடுத்து வந்து சதாசிவ பிரம்மத்திற்குதாம் பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாராம். அங்கிருந்து கிளம்பும் போது ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தின் படத்தை பல்லக்கில் வைத்து சிருங்கேரிக்கு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். இப்போதும் சிருங்கேரி ஆசார்யர்கள் தமது தமிழக விஜயத்தில், குறிப்பாக பட்டமேற்ற பிறகு வரும் முதல் பயணத்தில் நெரூர் வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள் அளிப்பதைக் காணலாம்.

இவ்வாறாக பிரம்மத்தில் கலந்து 130 வருடங்கள் கழித்தும் தன்னை நோக்கி சிரத்தையுடன் வந்தவருக்கு அனுக்ரஹித்துள்ளார் சதாசிவர். மேற் சொன்ன நிகழ்ச்சியின் போது சிருங்கேரி ஆசார்யார் எழுதிய 45 ஸ்லோகங்களில் சிலவற்றை சொல்லி நாமும் அந்த பரபிரம்மத்தை வணங்குவோம்.

*பரமசிவேந்த்ர கராம்புஜ ஸம்பூதாய ப்ரணம்ர வரதாய

பததூத பங்கஜாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய.

பரமசிவேந்திரர் என்னும் மஹானின் கரகமலத்தால் உண்டானவரும், [இங்கு சொல்லப்பட்டிருக்கும் பரமசிவேந்திரர் காமகோடி பீடத்து யதி, சதாசிவருக்கு ஸன்யாசம் அளித்தவர்] நமஸ்கரித்தவர்களுக்குப் பரதத்துவத்தை அருளுபவரும், கால்களில் தாமரையை ஜெய்த்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

*கரமாஹி த்விஜ பதயே சமதம முக திவ்ய ரத்னவாரிதயே

சமனாய மோஹ விததே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய

காமம் என்னும் பாம்புகளுக்கு கருடனாக இருப்பவரும், சமம், தமம் போன்ற உத்தம ரத்னங்களிருக்கும் சமுத்ரமுமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை மோக சமூகம் அடங்குவதற்காக நமஸ்காரம் செய்கிறோம்.

*ப்ரணதாய யதி வரேண்யைர் கண நதாப்ய ஹார்ய விக்ன ஹ்ருதே

குணதா ஸீக்ருத ஜகதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய

யதிச்ரேஷ்டர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், விக்னேஸ்வரராலும் போக்க முடியாத விக்னங்களைப் போக்குபவரும், குணங்களால் உலகத்தையே தாஸபாவமடையச் செய்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

* சாஹமதி சாதுரீ ரசித சப்த ஸங்கைள் ஸ்துதிம்

விதாது மபிச க்ஷமோ நச ஜபாதி கேப்யஸ்திமே

பலம் பலவதாம் வர ப்ரகுரு ஹேது சூன்யாம் விபோ

ஸதாசிவ க்ருபாம் மயி ப்ரவர யோகினாம் ஸத்வரம்

மிகச் சாதுர்யம் நிரம்பிய சப்தங்களால் ஸ்துதி செய்யும் சாமர்த்யம் எனக்கில்லை. ஜபம் முதலியவை செய்வதற்கும் பலமில்லை. பலம் உள்ளவர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ சதாசிவரே!சமர்த்தரே!, யோகிகளில் ஸ்ரேஷ்டரே!, உமது அவ்யாஜ கருணையை சீக்கிரத்தில் என்பால் செலுத்த வேண்டும்.

*ஸ்தீகார்ச்சன ப்ரீத ஹ்ருதம்புஜாய பாகாப்ஜ சூடா பரரூப தர்த்தே

சோகாப ஹர்த்ரே தரஸாநதானாம்பாகாய புண்யஸ்ய நமோயதீசே

கொஞ்சம் பூஜித்தாலேயே சந்தோஷமடையும் மனமுடையவரும், சந்திரனை தலையில் பூஷணமாக அணிந்தவரான பரமசிவனின் மற்றொரு ரூபமானவரும், நமஸ்கரித்தவர்களுக்கு விரைவில் துக்கத்தைப் போக்குகின்றவரும், புண்யத்தின் பயனாக இருப்பவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ர யதீஸ்வரருக்கு நமஸ்காரம் செய்கிறோம்.

இந்த பாடல் நெரூரில் உள்ள சுவற்றில் எழுதபட்டிருக்கும்...

ஆலய ப்ரதிஷ்டைகள்
(i) தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!

(ii) கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர்.

(iii) தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர்.

(iv) தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர்.

(v) திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்.

நூல்கள்
மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

முக்தி
பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார். இவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் (நெரூர்) 10வது நாளில் அந்த இடத்தில் வில்வமரம் வளரும், அதன் அருகிலேயே சுயம்பு லிங்கம் தோன்றும் என்று கூறினார். அதே போன்று நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு லிங்கமும் காட்சி தருகிறது.

முக்கிய குறிப்பு : சதாசிவ பிரமேந்திராளின் குருவான பரமசிவேந்திராளின் ஜீவ சமாதி புதன் கேந்திரம் என்று அழைக்கப்படும் திருவெண்காட்டில் உள்ளதாக கூறப்படுகிறது