Tuesday, December 29, 2020

ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி - 29.12.2020


சப்த ரிஷிகளில் மிக ச்ரேஷ்டரான அத்ரி மகரிஷிக்கும் பதிவ்ரதா சிரோன்மணியான அனுஸுயா மாதாவிற்கு மும்மூர்த்திகளின் அம்சமாக பிறந்தவர் ஸ்ரீ தத்தாத்ரேயர். அத்ரி - அனுசுயா ஸத்புத்ரனை வேண்டி தவமிருக்க, அவரின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் "நானே என்னை கொடுக்கிறேன்' என்ற வாக்கியத்தின்படி 'தத்தாத்ரேயராக' அவதரித்தார். எப்படி அதிதி-கஸ்யபர் தம்பதியருக்கு வாமனராய், கர்தமர்-தேவஹூதி தம்பதியருக்கு ஸ்ரீ கபிலராய் தோன்றி அனுகிரஹித்தாரோ அதேபோல் அத்ரி - அனுசுயா தமபதிக்கு மும் மூர்த்திகளின் அம்சமாய் ஸ்ரீ தத்தாத்ரேயராய் தோன்றி அனுகிரஹித்தார்.

மார்கதரிசனம் குரு க்ருபையின்றி கிடைப்பதில்லை. குரு தத்தாத்ரேயர் ஒருவர்தான் மார்கதரிசனம் செய்விப்பவர். ஆகையினால் இவரது பிறப்பு மார்கழி (மார்க்க சீர்ஷ ) மாதத்தில் உண்டாயிற்று.

குரு பரம்பரை என்பது ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் இருந்துதான் ஆரம்பம்.

ப்ரஹ்மதேவனின் அம்சமான சந்திரன், விஷ்ணுவின் அம்சமான தத்தாத்ரேயன், சிவனின் அம்சமான துர்வாசன் என்று தங்களின் மூன்று அம்ச சக்திகளை அனுசூயாவிடம் அளித்தனர். இவர்களில் சந்திரனும், துர்வாசரும் தாயை நமஸ்கரித்து தவத்திற்கு செல்ல அனுமதி கோரினர். துர்வாசர் ரிஷி ஆனதால் தீர்த்த யாத்திரை செய்து தவம் செய்யவும், சந்திரன் தன்னுடைய லோகம் சென்று தன் தாயின் பாதங்களை தரிசித்து கொண்டிருக்கவும் விடை பெற்று சென்றனர். மூன்றாவது புத்திரன் விஷ்ணு மூர்த்தியான ஸ்ரீ தத்தாத்ரேயர்  அவர்களுடன் தங்கினார். "ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்" என்ற வாக்கின்படி மூன்றுபேரும் சேர்ந்த தத்த மூர்த்தி குரு பீடத்திற்கு மூல புருஷராக விளங்கினார்.

குரு பரம்பரை என்பது ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் இருந்துதான் ஆரம்பம்.

தத்தாத்ரேய வழிபாடு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மிக மிக அதிகம். அதற்குக் காரணம் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே. 

ஸ்ரீமன் நாராயணனின் 24 ரூபங்களில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.

இவர் ஒரு அவதூதர். ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் (1.3.11) ஸ்ரீ தத்த அவதாரம் என்று பாகவதம் குறிப்பிடுகிறது. ஸ்ரீ விஷ்ணு குருவாகி அருள் புரிந்த ஓர் உன்னத அவதாரம் ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதாரம்.

த்ரிபுரா ரஹஸ்யம், அவதூத கீதை, தர்சனோபநிஷத், அவதூதோபநிஷத் இவரை பற்றி மிக விரிவாக விளக்குகின்றது. மார்க்கண்டேய புராணமும், ஸ்ரீ மத் பாகவதமும் இவரின் மகிமைகளை எடுத்தியம்புகிறது. ஸ்ரீ மத் பாகவதத்தில் (11-7,8,9) யயாதியின் புதல்வரான யதுவிற்கும் ஓர் அவதூதர்க்கும் (ஸ்ரீ தத்தர்) நடக்கும் சம்பாஷணைகள் 'யது வாத சம்வாதம்' என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ தத்தர் நித்யம் ஸந்நிஹிதோ ஹரி: என்ற கூற்றுக்கிணங்க அருகில் இருந்து காட்சி தந்து அனுகிரஹிப்பவர். ஆனால் நம்மால் அவரின் மாயையை புரிந்து கொண்டு அவரின் முழு கடாக்ஷத்தை பெறுவது மிகவும் கடினம்.

நித்ய சிரஞ்சீவி.

தத்தரின் பாத தூளியிலிருந்து யதுவும், கார்த்தவீர்யார்ஜுனனும் தோன்றினார்.

ஸ்ரீ தத்தரின் தோற்றம்

அவதூதர். கௌபீனம் அணிந்து சாம்பலை உடலில் பூசி கொண்டு ஏகாந்த ஸ்வரூபியாக, முற்றிலும் பற்றற்றவர். எப்பொழுது எங்கு இருப்பார் எங்கு செல்வார் என்று அனைவராலும் அறியப்பட முடிய யோக மாயா  ஸ்வரூபி ஸ்ரீ தத்தாத்ரேயர். பசு, நான்கு நாய்கள் புடைசூழ, கரங்களில் திரிசூலம், சங்கு சக்கர ஸ்வரூபியாய், சாம்பல் பூசிய தேகத்துடன், பிட்சை பாத்திரம் ஏந்தி, ஜெபமாலையுடன் அபார தேஜஸுடன் வீற்றிற்றுப்பார்.

பசு/காமதேனு - கேட்பவற்றை அள்ளித்தரும் காமதேனுவை பக்தர்களின் மனோபீஷ்டங்களை பூர்த்தி செய்பவர். தர்ம ரூபம்.

நான்கு நாய்கள் - நான்கு வேதங்களை குறிக்கும்.

திரிசூலம் - அறியாமை, அகந்தையை அழிப்பதை குறிக்கும்.

சுதர்சன சக்கரம் - முக்காலமும் அறிந்தவர். ஆதியும் அந்தமும் இல்லாத விஷ்ணு ஸ்வரூபம் என்பதை உணர்த்தும்.

சங்கு - உறங்கும் ஆத்மாவை பிரணவ ஒலியாகிய ஓம்காரதத்துடன் தட்டி எழுப்பும்.

சாம்பல் - செல்வம், ஆடம்பரம், அகந்தை, புகழ், ஆணவம் அனைத்தும் ஒருநாள் அழியும் நிலையற்ற தன்மையுடையவை என்பதை உணர்த்தும்.

பிட்சை பாத்திரம் - தனக்கென்று ஏதும் சேர்க்காமல் இருப்பதை பகிர்ந்துண்டு உண்ண வேண்டும் என்பதை உணர்த்தும்.

ஜெபமாலை - நித்யம் பகவானின் நாம ஜெபத்தில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்த்தும்.

ஸ்ரீ தத்தர் கலியுகத்தில் எடுத்த அவதாரங்கள் ஐந்து:

ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர்

ஸ்ரீ நரசிம்ஹ ஸரஸ்வதி

ஸ்ரீ சுவாமி சமர்த்தர் (எ) அக்கல்கோட் மஹராஜ்

ஸ்ரீ மாணிக் பிரபு மஹராஜ்

ஸ்ரீ ஷீர்டி சாய் பாபா

'டேம்பே ஸ்வாமி' என்று அழைக்கப்படும் 'ஸ்ரீ வாசுதேவானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்' 3500 ஸ்லோகங்கள் மற்றும் 64 அத்தியாயங்கள் கொண்ட ஸ்ரீ தத்த புராணம் படைத்தார்.

2000 ஸ்லோகங்கள் அடங்கிய 'குரு சரித்திரம்' என்னும் நூலும் இவரின் முதல் இரண்டு அவதாரங்களான 'ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர்' மற்றும் 'ஸ்ரீ நரசிம்ஹ ஸரஸ்வதி' மகிமைகளை பற்றி விரிவாக பேசுகிறது.

ஸ்ரீ தத்தர் தனது யோகா மாயையால் 15 தத்வங்களாலான உலகை படைத்து தான் 16ஆவது தத்வமான புருஷனாக ஆனார்.

இவரின் லீலா விநோதங்களை அறிந்து கொள்வது மிக மிக கடினம் ஏனென்றால் முற்றிலும் மாய தோற்றத்துடன் வெவ்வேறு ரூபங்களில் தனது உண்மையான ஸ்வரூபத்தை மறைத்து மாய வடிவத்துடன் விளங்கும் குரு. பூர்வ ஜென்ம புண்ணிய குவியல் இருந்தால்தான் இவரை வழிபடும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.

ஏகநாதர், ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள், தத்தோத்பவா, அலர்கன், விஷ்ணு தத்தர், சத்ருஜித் மற்றும் பல பாகவதோத்தமர்கள் இவரின் தரிசனம் பெற்றனர்.

ஸ்ரீ தத்தரின் 24 குரு மார்கள் :

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், வீட்டில் பூச்சி, தேனீ, யானை, தும்பி, மான், மீன், பிங்கலை என்னும் வேசி, அன்னப்பறவை, பாலகன், குமாரி, வேடன், சர்ப்பம், சிலந்திப்பூச்சி, ஈ.

சீடர்கள்

இவர் ஸ்ரீ பரசுராமரின் தந்தை ஜமதக்னியின் குரு. இவர்தான் ஸ்ரீ பரசுராமருக்கு சாக்த வழிபாட்டின் தத்துவத்தை உபதேசித்த குரு என்று திரிபுர ரஹஸ்யத்தின் 'மஹாத்ம்ய-ஜ்ஞான கண்டங்கள் விளக்குகின்றன. இதன் அடிப்படையில் பரசுராமர் கல்ப சூத்திரங்களை தொகுத்து ஸ்ரீ வித்யா பூஜைக்கான முதல் விளக்க நூலை படைத்தார்.

ஆறாவது சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் தோன்றிய ப்ரஹ்லாதருக்கு குருவாக இருந்து ‘ஆத்ம தத்வத்தை’ உபதேசித்தார்.

க்ருத வீர்யனின் புதல்வனான 27 ஆவது சதுர்யுகத்தில் தோன்றிய கார்த்தவீர்யார்ஜுனனுக்கு ‘அஷ்டாங்க யோகத்தை’ உபதேசித்தார்.

இவரின் அனுகிரஹத்தால்தான் ஸ்ரீஆதிசங்கரர் கைலாசத்தில் இருந்து யோகமார்க்கத்தில் சென்று ஈசனிடம் பஞ்ச லிங்ககளைப்பெற்று 'சௌந்தர்ய லஹரி' பெற்றார் என 'ஸ்ரீ சங்கர விஜயம்' கூறுகிறது.

ஸ்ரீ தத்தர் எழுந்தருளியிருக்கும் திவ்ய ஸ்தலங்கள்:

அத்ரி அனுசுயா குடில், மாஹூர க்ஷேத்ரம், கரவீர க்ஷேத்ரம், ந்ருசிம்ஹவாடீ, ஒளதும்பர க்ஷேத்ரம், பீட்டாபுரம், அக்கல்கோட், கானகாபூர், மாணிக் நகர், காரஞ்சா, குருவபுரம், நாசிக், பட்காம்வ், சேந்தமங்கலம், ஸ்கந்தகிரி, சேங்காலிபுரம், கணபதி சச்சிதானந்த தத்த பீடம் மற்றும் பல.

ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-

மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |

மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |

அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |

வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||

 

ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே

யோகீஸ்வராய (அத்ரி புத்ராய) தீமஹி

தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயரைத் தரிசிக்க :-

யதுகுலோ வனிகம் வௌஷட் ||

இந்த மந்திரத்தை இரவில் படுக்கையில் அமர்ந்தபடியே ஜபித்து வர ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்கலாம்.

சந்தானபாக்கிய_ப்ரத (குழந்தை வரம் தரும்) ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்:

தூரிக்ருத பிஸாச்சார்த்தி ஜீவயித்வம் ம்ருதம் சுதம்|

யோபுவபிஷ்டதா பாது ச ந: சந்தான விருத்தி க்ருத்||

இந்த மந்திரத்தை வியாழக்கிழமை குருஹோரையில் வெண்ணையில் மந்திரித்து உண்டு வர விரைவில் பாக்கியம் கிட்டும்.

ஸ்ரீ தத்தரின் அவதார கதைகள் கேட்பவரையும், சொல்பவரையும் பாவங்களிலிருந்து மீட்டு, பற்றற்ற பரம நிலையை அளித்து முடிவில் மோக்ஷ சாதனையை அளிக்கும் வல்லமை கொண்டது.


 

Saturday, November 28, 2020

ஸ்ரீ மானிக் பிரபு மஹராஜ் மஹாசமாதி தினம் - 29-11-2020

  

ஸ்ரீவத்ஸ கோத்ரம் தேசஸ்த ரிக்வேதி ப்ராஹ்மண தம்பதியரான ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடே, ஸ்ரீ பய தேவி, தொடர்ந்து 16 வருடங்கள் குரு சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக, குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்கு மகனாக பிறப்பதாக உறுதியளித்து, மகாராஷ்டிர மாநிலம், கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில் டிசம்பர் 22, 1817 அன்று (மார்கஷீர்ஷா பூர்ணிமா - தத்த ஜெயந்தி, ஷாகா 1739 ஈஸ்வர நாம சம்வஸ்தரா) ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த உடன் அநேக சுப சகுனங்கள் தோன்றின.

இவர் தத்தாத்ரேயரின் நான்காவது திரு அவதாரமாக கருதப்படுகிறார்.

இவரின் பிறந்த ஊரான லத்வந்தியில் உள்ள ஸ்ரீ மானிக் பிரபுவின் அழகிய குழந்தை ரூபம்

மானிக் பிரபுவின் முஸ்லீம் பக்தர்கள் அவரை மெஹபூப் சுபானியின் அவதாரமாக மதித்தனர். அதே நேரத்தில் அவரது லிங்காயத் பக்தர்கள் அவரை பசவண்ணாவின் ஒரு வடிவமாக பார்த்தார்கள்.

இவருக்கு தாதாசாகேப் என்று ஒரு மூத்த சகோதரரும், தத்யா சாஹேப் என்று அழைக்கப்படும் ஒரு தம்பியும், சிமனாபாய் என்ற சகோதரியும் இருந்தனர்.


தத்தரின் அவதாரமாக பிறந்த இந்த குழந்தைக்கு ஓர் அபூர்வ சக்தி இருந்தது. இக்குழந்தைக்கு எதிரில் நின்று யாராகினும் தனது பிரச்சனைகளை கூறினால் அதற்கு உடனடி நிவாரணம் பெற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நிம்மதி பெற்றனர்.

இவருக்கு ஏழு வயதில் பெற்றோர் உபநயனம் செய்வித்தனர். இவர் செய்வீக குழந்தை அல்லவா ஆதலால் இவர் அனைத்து மந்திரங்களையும் ஓதி பண்டிதர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

படிப்பில் சிறிதும் நாட்டமின்றி இவர் திரிந்ததை அறிந்த பெற்றோர் தனது மகனை தாய் மாமா இல்லத்திற்கு அழைத்து சென்று ஓர் உத்தியோகத்தில் சேர்க்கும் படி கூற, அவரும் சேர்த்து விட, அந்த வேலையிலும் நாட்டம் இன்றி சிறிது மனக்கசப்போடு தாய் மாமா வீட்டில் இருந்து வெளியேறினார்.

இவர் புரிந்த லீலா வினோதம் சற்று வித்தியாசமானது. ஓர் பக்தனுக்கு புலியின் உருவில் காட்சி அளித்து அந்த க்ஷணம் முதல் அனைவராலும் 'மானிக் ப்ரபு' என்று அழைக்கப்பட்டார். ஹனுமான் ஆலய பூஜாரிக்கு தத்தரின் வடிவில் காட்சி அளித்தது கல்யாண் நகரில் காட்டு தீ போன்று பரவி இவர் தத்தரின் அவதாரம் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்து இவரிடம் ஆசி பெற வந்தனர்.

காசி, பண்டரிபுரம், பரளி வைத்தியநாதர், பீதார் மற்றும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று மக்களிடம் இறை நம்பிக்கையை வளர்த்தார்.

தனது பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் நீக்கினார். அனைத்து சமூகங்களும் அவரை மதித்ததால் அவருக்கு 'சகலமாதாச்சார்யா' என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஷீர்டி சாய் பாபாவை போன்று ஹிந்து-முஸ்லீம் பக்கதர்களிடையே ஓர் பாலமாக விளங்கினார்.

 

அற்புதங்கள்

 

v  இறந்த சிறுவனை தனது சக்தியால் உயிர்ப்பித்தார்.

v  கர்ப்பிணி பசுவை அடித்த முரடனுக்கு அந்த பசுவின் மூலம் தக்க பாடம் அளித்து திருத்தினார்.

v  விட்டல் பாபாவான பண்டரிநாதனை தொட்டு வணங்க முற்பட்டபொழுது பூஜாரி அவரை தடுக்க உடனே பண்டரிநாதனின் கழுத்தில் உள்ள மாலை மானிக் பிரபு கழுத்தில் விழுந்து ஸ்ரீ விட்டலனாகவே காட்சி அளித்தார்.

v  பக்தர்களுடன் பயணம் செய்கையில் கொடிய விஷ நாகம் தென்பட அதன் பாஷையில் பேசி அதனை போக வைத்தார்.

v  மக்களிடையே இறை நம்பிக்கையையும், மத ஒற்றுமையையும் வளர்க்க அயராது பாடுபட்டு அதில் அபார வெற்றியும் பெற்றார். இவரின் காலத்தில் ஸ்ரீ தத்தாத்திரேய வழிபாடு மிகவும் பிரபல்யமானது.

மராத்தி, கன்னடம், இந்தி, உருது மற்றும் சமஸ்கிருதம் போன்ற பல்வேறு மொழிகளில் ஏராளமான பஜன்கள் மற்றும் பதங்களை ஸ்ரீ பிரபு இயற்றினார்.

 

 முக்தி

ஹூம்னமாபாத் என்னும் மானிக் நகர் சென்று ஆஸ்ரமம் அமைத்து 1865 ஆம் ஆண்டு (29-11-1865) குழிக்குள் அமர்ந்து கொண்டு ஜீவ சமாதி அடைந்தார். இவரின் ஆத்மா இவரின் மூல ரூபமான ஸ்ரீ தத்தரிடம் சென்று கலந்தது.

ஹுமனாபாத் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும், பிதாரில் இருந்து 51 கி.மீ தூரத்திலும் ஸ்ரீ மானிக் பிரபு கோயில் அமைந்துள்ளது.

 



 

 

 



Sunday, October 25, 2020

கார்த்திக் மாத தாமோதர பூஜை (31.10.2020 - 30.11.2020)

சாதுர்மாஸ்யத்தின் கடைசி மாதம் ‘கார்த்திக் மாதம்’ எனப்படும். மாதங்களில் மார்கழியாக ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதுபோல் ஸ்ரீமதி ராதாராணி மாதங்களில் 'கார்த்திக் மாதமாக' இருப்பதால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரீதியான மாதமும் கூட.

பகவான் நாராயணரின் பன்னிரு திவ்ய நாமங்களில் 12-ஆவது திருநாமமாக வருவது 'தாமோதரா'. (தாம - கயிறு, உதர - வயிறு). மிகவும் பவித்ரமான திருநாமம் இது.

யசோதா மாதா ஸ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் மற்றும் ஸ்ரீமதி ராதாராணியின் மாதமாக கருதப்படுவதால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மனதுக்கு இனிய விரதமாக கொண்டாடப்படுகிறது.


பத்ம புராணமும், ஸ்கந்த புராணமும் இதன் மஹிமை மற்றும் மகத்துவத்தை மிகவும் விஸ்தாரமாக கூறுகிறது. நமது அனைத்து பாவங்களும் விலகும் ஓர் உன்னத விரதமாக கருதப்படுகிறது.

கண்ணன்  என்றதும் அவனின் பால்ய லீலைகளும் விஷமத்தன்மையும் தான் சட்டென்று நினைவிற்கு வரும். கண்ணன் பால்ய லீலைகளில் மிகவும் முக்கியமானது வெண்ணை திருடும் படலம். வெளிப்பார்வைக்கு சாதரணமாக தெரிந்தாலும் இதில் மிகப்பெரிய தத்வம் பொதிந்துள்ளது. அகிலத்தையே ரட்சிக்கும் ஸ்ரீ வத்சனான ஸ்ரீமன் நாராயணனருக்கு கேவலம் வெண்ணை என்பது பெரிய விஷயம் அன்று. ஏன்னென்றால் அவரிடம் சகல ஐஸ்வர்யத்திற்கு அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மி இருக்கும் பொழுது வெண்ணையின் தேவைதான் என்ன? ஏன் அனைத்து கோபியர்கள் இல்லத்தில் வெண்ணை திருடினார்? அனைத்து கோகுல வாசிகளையும் தன்னுடைய க்ருபாகடாக்ஷத்தினால் ரக்ஷிக்கத்தான் ஒவ்வொரு இல்லங்களிலும் வெண்ணை திருடினார். யாருடைய வீட்டிலெல்லாம் வெண்ணை திருடினாரோ அவர்களளெல்லோரும் பூர்வ ஜெனமத்தின் புண்ணிய பலனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதை அறியாத கோபியர்கள், தாய் யசோதா மாதவிடம் தங்கள் இல்லங்களில் வெண்ணையை தங்கள் குமாரன் கண்ணன் திருடுவதாக புகார் அளித்தனர். இதனால் மிகுந்த தர்மசங்கடம் அடைந்த யசோதா மாதா, கண்ணனை அழைத்து அவனின் சேஷ்ட்டைகள் நாளுக்கு நாள் அதிதிகமாவதை கண்டு மனம் பொறுக்காமல், அவனை கயிற்றினால் கட்ட  முற்பட்டபொழுது கயிறு வெறும் இரண்டு அங்குலம் தான் இருந்தது. மேற்கொண்டு பல கயிறுகளை கொண்டு வந்து முடித்து போட்டு கட்ட அதுவும் பற்றாமல் போக யசோதா சோர்ந்து போனாள். அகிலத்தையே தன்னுடைய சிறு ரோம காலின் நுனியில் அடக்கியாள்பவரை கேவலம் இரண்டு அங்குல கயிறு கட்டுப்படுத்துமா என்ன? இருந்தாலும் தாயின் சோர்வு நிலை கண்டு தானே மனமுவந்து தாயின் கயிற்றினால் கட்டுப்பாட்டார் (அ) கட்டுப்படுவது போல் நடித்தார்.

'கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்'

(மதுரகவி ஆழ்வார்)

யசோதா மாதா கயிறை உரலினில் இணைத்து அவன் எங்கும் அசையமுடியாதபடி கட்டினாள். என்னே அதிசயம் அகல கோடி ப்ரஹ்மாண்டகளையும் தாங்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணு தாயின் அன்பு பிடியில் தன்னை கட்டுப்படுத்தினார் என்பதே நிதர்சன உண்மை. ஸ்ரீ மாய கண்ணன் இருப்பு கொள்ளாமல் உரலை இழுத்து கொண்டு இரு மரங்களுக்கு இடயில்சென்று 'நாரத' முனிவரின் சாபத்தினால் ‘மருத மரமாக’ இருந்த 'குபேரனின் புதல்வர்களாக இருந்த 'நள'கூபரர்' மற்றும் 'மணிக்ரீவன்' என்னும் யக்ஷர்களின் சாபநிவர்த்தி செய்து அவர்களை ஆட்கொண்டார் என்ற மற்றொரு உண்மையும் இதில் பொதிந்துள்ளது. மரங்கள் பிளந்த சப்தத்தினால் மிகவும் பயந்த யசோதா மாதா நந்த கோபர், ரோஹிணி உடன் வந்து தன்னையுடைய மகனை மார்போடு அணைத்து தன்னுடைய செயலுக்கு மிகவும் வருந்தினாள். ஸ்ரீ கிருஷ்ணரும் பயப்படுவது போல் நடித்து தாயின்  மார்பில் சாய்ந்தான். என்னே ஒரு மனோஹராமான நிகழ்வு!!! என்னே யசோதா மாதாவின் பாக்கியம்!!! மார்போடு ஸ்ரீ கிருஷ்ணரை அணைத்து சொல்லொண்ணா பரவச நிலையை அடைந்தாள். யசோதா மாதா அடைந்த பரவசத்தை ஸ்ரீ ப்ரஹ்மாவோ, ஸ்ரீ ருத்ர தேவரோ ஏன் ஸ்ரீ மஹாலக்ஷ்மியோ கூட பெற்றததில்லை.

தாமோதர அனுஷ்டிக்கும் முறை

ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்து, குறைந்தபக்ஷம் 1008 முறை அக்ஷ்டாக்ஷர மந்திரம்/ஹரி நாம ஜபம்/ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம் ""ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண... கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே! ஹரே ராம, ஹரே ராம... ராம, ராம, ஹரே ஹரே''  என்று ஜபித்து, உரலில் ஸ்ரீ கிருஷ்ணரை கட்டிய படத்துடன் வழிபடுவது அதி உத்தமம்.

 

ப்ரஹ்மசர்ய விரதம் அவசியம்.

மீன், மாமிசம், மற்றும் இதர அசைவ பொருட்களை மற்றும் மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் உண்ணக் கூடாது.

துளசி தீர்த்தம் பருகுவது புண்ணியம். நெய் தீபம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு காண்பிப்பது அபார பலன் தரும். ஸ்ரீமதி ராதாராணி நினைத்து ஸ்ரீ கிருஷ்ண ஜபம் புரிவது உத்தமம்.

துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி ஸ்ரீமன் நாராயணனை முறைப்படி பிரார்த்தனை செய்யவும்.

தூய பக்தர்களுக்கு தானம் வழங்குதல் நன்று.

தினமும் சுவையான பதார்த்தங்களைப் படைத்து பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள்.

‘ஸ்ரீ நாரத மகரிஷியும்’ மற்றும் ‘ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும்’ இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் முக்கியத்துவத்தையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரீதியான விரதம் என்றும் வலியுறுத்தினார்.

ஆயிரம் விஷ்ணு நாமங்கள் ஒரு ராம நாமத்துக்கு சமம் என்றும், மூன்று ராம நாமம் ஒரு கிருஷ்ண நாமத்துக்கு சமம் என்றும் சாஸ்த்திரங்களில் கூறப்பட்டு உள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.19.6).

கார்த்திக் மாதத்தில் ஸ்ரீமத் பாகவத பாராயணம் மகா கீர்த்தி, தேஜஸ், புண்ணியம் அளிக்கும் குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணர் உரலில் கட்டுண்ட படலத்தை படிப்பது அபார பலன் அளிக்கும். 18 புராணங்களையும் படித்த பலன் அன்று ஸ்ரீமத் பாகவத பராயணத்தினால் கிடைக்கும்.

 

ய: படேத் ப்ரயதோ நித்யம்

ஸ்லோகம் பாகவதாம் முனே

அஷ்டதச: புராணானாம்

கார்த்திகே பலம் அப்னுயத்

(ஹரி பக்தி விலாசம் 16.81)